அமைச்சர் வன்னி அரசு 

 

கோப்புப் படம் 

தமிழகம்

துரைமுருகன் இல்ல திருமண நிகழ்வு சர்ச்சை: அமைச்சர் வன்னி அரசு கருத்து

ந.முருகவேல்

கள்ளக்குறிச்சி: “துரைமுருகன் தனது வீட்டில் தனது பேத்தியின் திருமணத்தை, சமஸ்கிருத வேத மந்திரங்கள் முழங்க வைதீக முறைப்படி நடத்த, அதை அவர் விரும்பிச் செய்தார் என்பதை நான் நம்பவில்லை” என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்வில், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கலந்து கொண்டு, ரூ. 70 கோடி மதிப்பீட்டில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், ‘சனதான கருத்துகளின் மீது கடுமையான விமர்சனங்களை திமுக வைக்கும் சூழலில், அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகனின் இல்லத் திருமணம் வேத மந்திரங்கள் முழங்க வைதீக முறைப்படி நடந்ததது சரியா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர், “தமிழகம் மட்டுமல்ல; இந்தியாவிலேயே சீர்திருத்தத் திருமண புரட்சிக்கு வித்திட்ட இயக்கம் திமுகதான். அப்படிப்பட்ட இயக்கத்தின் மூத்த முன்னோடியான துரைமுருகன் தனது வீட்டில் தனது பேத்தியின் திருமணத்தை, சமஸ்கிருத வேத மந்திரங்கள் முழங்க வைதீக முறைப்படி நடத்த, அதை அவர் விரும்பிச் செய்தார் என்பதை நான் நம்பவில்லை. திருமண வீட்டில் மணமகன் வீட்டார் அதை விரும்பியதால், அவ்வாறு செய்திருக்கலாம்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, ‘தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் அவுட்சோர்சிங் முறை அமல்படுத்துவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது’ குறித்த கேள்விக்கு, “அவுட்சோர்சிங் முறையில் எங்கள் கட்சிக்கு உடன்பாடில்லை. சமூக நீதித்துறையில் அவுட்சோர்சிங் முறையை நாங்கள் கொண்டு வரவில்லை.

ஆனால், சமூக நீதித்துறையின் கீழ் உள்ள விடுதிகளில் பணி செய்ய சமையலரே கிடைக்கவில்லை. அதற்காக டிஎன்பிஎஸ்சி மூலம் ஆள் எடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதுபோன்ற தருணங்களில் தற்காலிகமாக அவுட்சோர்ஸிங் முறையை நாடுவதில் தவறில்லை” என்றார்.

அதிமுக திமுக இணைந்து தனக்கு ரூ.30 கோடி வரை பணம் தருவதாகவும், நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று கேட்டதாகவும் தவெக எம்எல்ஏ முஸ்தபா முன்வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் வன்னியரசு, “மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியில் நாங்கள் இடம்பெற்றுள்ளோம். நம்பிக்கை வாக்கெடுப்பு வரட்டும். வெற்றியை நிச்சயம் நாங்கள் பெறுவோம்” என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT