சென்னை: பரந்தூர் ஏகனாபுரத்தில் சமூக நலக் கூடம் கட்டித்தரப்படும் என்று அமைச்சர் வன்னி அரசு நேற்று உறுதியளித்துள்ளார். சட்டப்பேரவையில் சமூக நீதித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பின் நேற்று அமைச்சர் வன்னி அரசு பதிலளித்து பேசியதாவது:
சமூகநீதி, சமத்துவம்தான் எங்கள் இலக்கு.
அந்த அடிப்படையில்தான் இந்த அரசை ஆதரித்து, அமைச்சரவையில் பங்கேற்றுள்ளோம். அமைச்சரவை என்பது எங்களுக்கு 2-ம் பட்சம்தான். தீக்கிரையாக்கப்பட்ட குடிசைகளின் சாம்பலில் இருந்தும், ஆணவ படுகொலைகளின் ரத்த சகதிகளில் இருந்து வந்தவர்கள் நாங்கள்.
விசிக ஒரு விடுதலைக்கான இயக்கம். அமைச்சரவையா, சாதி ஒழிப்பு களமா எனக் கேட்டால் சாதி ஒழிப்பு களம்தான் முதன்மையானது. அமைச்சரா, தமிழின விடுதலையா என்று கேட்டால் தமிழின விடுதலைதான் எங்களுக்கு முக்கியம்.
எஸ்சி, எஸ்டி மக்கள் அதிகமாக வாழும் குடியிருப்புகளில் சமுதாயக் கூடங்கள், பள்ளிக்கூடங்கள், விடுதிகள், அடிப்படை உள்கட்டமைப்புகள் என பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்த அமைச்சர்களிடம் இருந்தும், எம்எல்ஏக்களிடம் இருந்தும் நூற்றுக்கணக்கான கோரிக்கைகள் வந்துள்ளன. அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து தேவைக்கேற்ப திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படும்.
விமான நிலைய திட்டம் கைவிடப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். விமான நிலைய திட்டத்தை எதிர்த்து மக்களின் உரிமைக்காகப் போராட்டத்தை ஒருங்கிணைத்து முன்னெடுத்த போராட்டக் குழுவினர் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
விசிக தலைவர் திருமாவளவனையும் சந்தித்து நன்றி தெரிவித்தனர். நீண்ட கால போராட்டத்திலிருந்து விடுதலை கிடைத்ததாக முதல்வரிடம் தெரிவித்தனர்.
அந்த சந்திப்பின்போது ஏகனாபுரத்தில் சமூகநலக் கூடம் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று ஏகனாபுரம் பகுதியில் புதிய சமூகநலக் கூடம் கட்டித் தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.