இடது: டி.ஆர்.பி.ராஜா | வலது: எடப்பாடி பழனிசாமி

 
தமிழகம்

‘எங்கள் திட்டங்களின் காப்பி தான் பழனிசாமி வெளியிட்ட அதிமுக வாக்குறுதிகள்’ - திமுக ரியாக்‌ஷன்

தமிழினி

சென்னை: “கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களையே காப்பியடித்து தேர்தல் வாக்குறுதியாக வெளியிட வேண்டிய அளவுக்கு அதிமுகவின் நிலைமை பரிதாபமாக போய்விட்டது” என திமுக அரசின் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒவ்வொரு தேர்தலிலும் கதாநாயகனாக திகழும் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாவதற்கு முன்பே அறிவாலயம் வாசலில் குத்த வைத்து காத்திருக்கும் அதிமுகவினர், திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியானதும் முதல் காப்பியை வாங்கிக்கொண்டு, அதை அப்படியே காப்பியடித்து அதிமுகவின் தேர்தல் அறிக்கையாக வெளியிடுவது தான் வழக்கமான நடைமுறை. இந்த முறை, அதில் விசித்திர மாற்றத்தை செய்து தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

கடந்த ஐந்து ஆண்டுகளாக திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு ‘டூப்’ போட்டு அறிக்கை வெளியிட வேண்டிய அளவுக்கு அதிமுகவின் நிலைமை பரிதாபமாக போய்விட்டது. 2021-ல் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியானபோது, தமிழ்நாட்டின் நிதி நிலைமை சரியில்லை, எனவே இதையெல்லாம் நிறைவேற்றவே முடியாது என்றார் பழனிசாமி.

ஆனால், தமிழ்நாட்டை அனைத்து தளங்களிலும் முன்னேற்றியதுடன், எதையெல்லாம் திமுகவால் செய்ய முடியாது என்று எதிர்கட்சி தலைவர் சொன்னாரோ, அதை எல்லாம் முதல்வர் ஸ்டாலின் வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டிவிட்டார். இப்போது புதிதாக எதுவும் சிந்திக்க திராணி இல்லாமல் திமுக அரசின் பழைய திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டும் அறிவிப்புகளை வெளியிடுகிறது அதிமுக.

அவர்கள் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் உள்ளவர்களின் திறமை மீது நம்பிக்கை இல்லாமல், திமுக அரசின் சாதனை திட்டங்களை ரோல் மாடலாகக் கொண்டு, அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இது உங்களுக்கு செட் ஆகல சார். வெயிட் பண்ணுங்க. உங்க மூளையை இப்ப கசக்க வேண்டாம். எப்போதும் போல இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் திமுக தேர்தல் அறிக்கை வந்த பிறகு, அதை முழுமையாக உங்க பழைய ஜெராக்ஸ் மிஷினில் காப்பி எடுக்கலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரகுபதி விமர்சனம்: “திமுக அரசின் சாதனைத் திட்டங்களை முதன்முறையாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மறைமுகமாகப் பாராட்டியிருக்கிறார். புதிதாக எதையும் வாக்குறுதியாகத் தர இயலாத பரிதாப நிலைக்கு போய்விட்ட பழனிசாமி திமுக வெற்றிகரமாக நிறைவேற்றிய திட்டங்களையே ‘காப்பி பேஸ்ட்’ வாக்குறுதியாக அறிவித்திருக்கிறார்.

பழனிசாமி அறிவித்திருப்பதிலேயே மிகப் பெரிய நகைச்சுவை நூறு நாள் வேலைத்திட்டத்தை நூற்றைம்பது நாளாக உயர்த்துவாராம். நூறு நாள் வேலைத்திட்டத்திற்கே குழி பறிக்கும் பாஜகவின் புதிய சட்டத்தை ஆதரித்த துரோகி பழனிசாமி தன்னை ஏமாற்றிக் கொள்ளலாமே தவிரத் தமிழ்நாட்டு மக்களை ஒருநாளும் ஏமாற்ற முடியாது.

எம்.ஜி.ஆர் மாளிகை பரணில் இருக்கும் அதிமுகவின் 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல் அறிக்கைகளில் கொடுத்த வாக்குறுதிகளைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள் பழனிசாமி. அதில் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் என்னாச்சு என மனசாட்சியைக் கேட்டுப் பாருங்கள். தேர்தல் தேதியே அறிவிக்கப்படாத நிலையில், முந்திக் கொண்டு வந்து ஏன் பழனிசாமி வாக்குறுதிகளை வாரி வழங்குகிறார்? திராவிட மாடல் அரசு, மக்களுக்கு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பும் 3 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் அடிமட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.

“எங்குப் பார்த்தாலும் மக்களிடம் பொங்கல் பரிசுத் தொகுப்பு பற்றித்தான் பேசிக்கிறாங்க” என நிர்வாகிகள் எல்லாம் பழனிசாமியிடம் புலம்பிய பிறகுதானே திடீரென இந்த வாக்குறுதிகளை வெளியிடும் யோசனைக்கு பழனிசாமி வந்திருக்கிறார். அதிமுகவிடம் எந்தப் புதிய யோசனைகளும் இல்லை என்பதையே பழனிசாமியின் வாக்குறுதிகள் காட்டுகின்றன” என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

முன்னதாக, அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 109-வது பிறந்தநாளை ஒட்டி சென்னையில் இன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.

அதில், மகளிருக்கு மாதம் ரூ.2,000, ஆண்களுக்கு பேருந்து பயணம் இலவசம், 125 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக மாற்றப்படும், அம்மா குடியிருப்பு திட்டத்தின் கீழ் மனை வாங்கி, அனைவருக்கும் வீடு கட்டித் தரப்படும், 5 லட்சம் பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க, தலா ரூ.25,000 மானியம் வழங்கப்படும் ஆகிய 5 திட்டங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT