அமைச்சர் சிவசங்கர்

 
தமிழகம்

“மெட்ரோ ரயில்களுக்கு அனுமதி மறுப்பு மத்திய அரசின் வஞ்சனை” - அமைச்சர் சிவசங்கர்

பெ.பாரதி

அரியலூர்: மத்திய அரசு வஞ்சகத்தோடு தான் மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில்களுக்கு அனுமதி வழங்காமல் நிறுத்தி இருக்கிறார்கள் என போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “தமிழகத்தில் இயங்கி வருகின்ற பழைய பேருந்துகளை எல்லாம் மாற்றி புதிய பேருந்துகள் இயக்குவதற்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டதன் அடிப்படையில், புதிய பேருந்துகள் கடந்த ஆண்டிலிருந்து படிப்படியாக மாற்றப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று அரியலூரில் நான்கு பழைய வழித்தடங்களில் இயங்கிக் கொண்டிருந்த பழைய பேருந்துகள் மாற்றப்பட்டு புதிய பேருந்துகள் இயக்கத்திற்கு கொண்டுவரப்படுகிறது.

அதேபோல செந்துறையில் ஐந்து புதிய பேருந்துகள் வழக்கத்தில் கொண்டுவரப்படுகிறது. பொதுமக்கள் பழைய பேருந்துகளிலேயே பயணப்பட்டு சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையை மாற்றி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதேபோன்று புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இயந்திரம் மூலம் டிக்கெட் வழங்குவது தமிழ்நாடு முழுவதும் நடைமுறையில் உள்ளது.

சென்னையில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போது, 750 பேருந்துகள் சிஎன்ஜி பேருந்துகளாக மாற்றுவதற்கு ஆணையிடப்பட்டிருக்கிறது. தொலைதூரம் இயங்குகின்ற அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 20 வால்வோ பேருந்துகள் வாங்குவதற்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இது அடுத்த மாதத்தில் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.

போக்குவரத்துத் துறையில் ஜிபே முறைக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. படிப்படியாக அந்தப் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மக்கள் அதை பயன்படுத்துகிறார்கள்.

மின்சாரப் பேருந்துகளைப் பொறுத்தவரை ‘ஜிசிசி மெத்தட்’ என்கிற ஒப்பந்த அடிப்படையில் இயக்குவதற்கான நடவடிக்கையை நாம் எடுத்து அந்தப் பணியை சென்னையிலே தொடங்கி விட்டோம். ஆனால் மத்திய அரசு இப்பொழுது தான் கொண்டு வருகிறார்கள். நாம் அதற்காக புதிய பேருந்துகளை வாங்க வேண்டும் என்றால் மின்சாரப் பேருந்துகள் மிகுந்த விலை கொண்ட பேருந்துகளாக இருக்கின்றன . அவற்றைப் அந்த நிறுவனங்களே பராமரித்தால் தான் சரியாக இருக்கும். அதன்பேரில், ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பித்தவர்களுக்கு அந்த டெண்டர் அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கிறது.

எனவே நம்முடைய மாநிலத்துக்கு எது உகந்ததாக இருக்குமோ அந்த அடிப்படையில் செய்கிறோம். மெட்ரோ ரயிலை பொறுத்தவரை கோவை, மதுரையில் மக்கள் தொகை குறைவாக இருக்கிறது என்கின்ற ஒரு காரணத்தை தான் சொல்லியிருக்கிறார்கள். இதைவிட குறைவாக இருக்கின்ற வட இந்தியாவில் இருக்கின்ற இந்தூர் போன்ற நகரங்களில் இந்த மெட்ரோ ரயிலை துவக்கி இருக்கிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால் வாரத்துக்கு 80 பேர் பயணிக்கின்ற நிலையெல்லாம் பல மெட்ரோ ரயில்களில் இருக்கிறது. ஆனால் நிச்சயமாக கோவையிலும், மதுரையிலும் இது பெருமளவில் மக்கள் பயன்பாட்டுக்குச் சரியாக இருக்கும் என்கின்ற காரணத்தினால் தான் நாம் இதைக் கேட்டிருக்கின்றோம்.

பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன், அடுத்து எங்கள் ஆட்சி அமைந்தால் நாங்கள் மெட்ரோ ரயிலைக் கொண்டு வருவோம் என்று சொல்கிறார்.

நயினார் நாகேந்திரன் அவர் ஊருக்காக சொல்கிறார் என்கிறார். அந்தக் கட்சியிலே முதலில் அவர்களுக்கு ஒருமித்த கருத்து இல்லை. எப்படி தமிழ்நாட்டை ஏமாற்றுவது என்கின்ற எண்ணத்தில் வெவ்வேறு குரலிலே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாக நீட் தேர்வில், புதிய கல்வி கொள்கையை அறிமுகப்படுத்துவதில், மாநில உரிமைகளை பறிப்பதில், ஆளுநரை வைத்து சட்டங்களுக்கு அனுமதி கொடுக்காமல் தடுப்பதில் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் செய்து வருகிறதோ அதே வஞ்சகத்தோடு தான் மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில்களுக்கு அனுமதி வழங்காமல் நிறுத்தி இருக்கிறார்கள்.

இது அப்பட்டமாய் அரசியல் செய்வதுதான். இப்படி எல்லாம் செய்தால் தமிழ்நாட்டு மக்கள் தங்களுக்கு பயந்து கொண்டு ஆதரவு கொடுப்பார்கள் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த திட்டங்களை எல்லாம் நாம் நம்முடைய நிதியை வைத்தே அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முதல்வர் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே கல்விக்கு நமக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்காமல் ஏமாற்றுகிறார்கள். ஆனால் நம்முடைய மாநிலத்தில் கல்விக்கான பணியை மிகத் தீவிரமாக நம்முடைய முதல்வர் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT