திருநெல்வேலி: “இந்திய அளவில் தமிழக முதல்வர் விஜய்யின் அரசியல் தாக்கம் அதிகரித்துள்ளது” என்று மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மாநிலம் முழுவதும் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. சிறுபான்மையின மக்களுக்கு அனைத்து நலத்திட்டங்களும் முழுமையாக சென்றடையும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கையில் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினர் மகிழ்ச்சி அடையும் வகையில் பல்வேறு சிறப்பான அறிவிப்புகள் இடம்பெறும். சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் முறையாக சென்றடையாத குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய அறிவிப்புகள் வெளியாகும். குலவணிகர்புரம், வெள்ளக்கோவில் பகுதிகளில் கல்லறை தோட்டங்களில் சுற்றுச்சுவர் அமைக்க ரூ.1.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு கூட்ட முடிவின்படி, தமிழக வெற்றிக் கழகத்துடன் தொடர்ந்து பயணிக்கிறோம். இது குறித்து கட்சியின் தேசிய தலைவர் மூலமும் அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டது. தமிழக வெற்றிக் கழகத்துடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து பயணிக்கும் முடிவை இஸ்லாமிய சமூக மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனார்.
சட்டப் பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், மறைமுகமாக பாஜக ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதால் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு தெரிவித்ததது, அமைச்சரவையிலும் இடம்பெற்றது. தற்போது முழு மனதுடன் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி பயணத்தை தொடர்ந்து வருகின்றோம்.
வக்பு சட்டத் திருத்தத்தில் இஸ்லாமியர் அல்லாதவர்களை உறுப்பினர்களாக சேர்க்கும் நடைமுறை தொடர்பாக தமிழக அரசு, நீதிமன்றத்தை நாடியுள்ளது. நீதிமன்றத்தின் முடிவின் அடிப்படையில் அரசு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்.
ஹஜ் பயணத்துக்கு மானியம் வழங்கப்படுவது போன்று உம்ரா பயணத்துக்கும் மானியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இது தொடர்பாக முதல்வருடன் கலந்தாலோசித்து அறிவிப்பு வெளியிடப்படும்.
மதம் மாறிய இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு சிறுபான்மையினர் பட்டியலில் இடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பான விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், சட்டரீதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு விரைவில் நல்ல முடிவு எடுக்கும்.
மதச்சார்பற்ற சமூக நீதியை காக்கும் அரசாக தமிழக வெற்றிக் கழக அரசு செயல்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் வழங்கப்பட்டதைவிட இஸ்லாமிய, கிறிஸ்தவ சிறுபான்மையின மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக வெற்றிக் கழகம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் இணக்கமாக சென்றுவிட்டதாக கூறுவது சரியானது அல்ல. சமூக வலைதளங்களில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற பதிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது.
நீண்ட காலமாக சிறையில் உள்ள சிறைவாசிகளை விடுவிக்கும் விவகாரத்தில் சட்டத்துக்கு உட்பட்டு செய்ய வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
2029-ல் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இண்டியா கூட்டணி செயல்பட்டு வருகிறது. இதில் தமிழக வெற்றிக் கழகமும் இணைந்து பயணிக்கும். இண்டியா கூட்டணியில் திமுக தொடர்கிறதா, இல்லையா என்பதை திமுகதான் விளக்க வேண்டும். தமிழகத்தை தாண்டி கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் விஜய்யின் தாக்கம் அதிகரித்து வருகிறது . 2029-ல் நாடாளுமன்ற தேர்தலில் இதன் தாக்கம் எதிரொலிக்கும்” என்று தெரிவித்தார்.