அமைச்சர் செங்கோட்டையன்
சென்னை: வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து இடி, மின்னல் தாக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, அனைத்து துறைகளும் ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், திருப்பூர், கோவையில் நேற்று கூடுதலாக மழை பெய்துள்ளது.
தண்ணீர் தேங்கிய பகுதிகளில் நீர் அகற்றப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை விரைவில் சரியாகும் அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீலகிரியில் 62 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போது அனைத்து இடங்களிலும், அது சரி செய்யப்பட்டுள்ளது.
பருவமழை தொடங்கியதில் இருந்து இடி, மின்னல் தாக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையின் அடிப்படையில், அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் திடீரென கூடுதலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேக மூட்டங்கள் எவ்வாறு செல்கிறது என கணிக்க முடியாது; அதை வைத்துதான் எதையும் சொல்ல முடியும்.
மழை பெய்து முடிந்த பின்னர்தான் பயிர் சேதங்களை கணக்கிட முடியும். நீலகிரி, கொடைக்கானல், ஏலகிரி பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே அங்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப்பயணிகள் அங்கு சென்று புகைப்படங்கள் எடுப்பதை தற்காலிகமாக நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்பகுதிகளில் முழு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கால்நடை இறப்பு எண்ணிக்கை குறித்து எங்களுக்கு இன்னும் தகவல் வரவில்லை” என்று அவர் தெரிவித்தார்.