இடது: அமைச்சர் ரமேஷ் | வலது: அனிதா ராதாகிருஷ்ணன்
சென்னை: திருச்செந்தூர் கோயிலில் அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வில் ஈடுபட்டபோது, அர்ச்சகர்களை இழிவுபடுத்தியதாக திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் ரமேஷ், ‘கோயிலில் முறைகேடு செய்பவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் தனது எக்ஸ் தள பக்கத்தில், அமைச்சர் ரமேஷின் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை குறிப்பிட்டு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வருகை தருகின்றனர். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற சுவாமி தரிசனம் பெறுகின்றனர்.
வைகாசி விசாக திருவிழா நாளான இன்று சுவாமி தரிசனத்துக்காக விரதம் இருந்து காவடியேந்தி, பல நாட்கள் கால்நடையாக நடந்து வந்தும் சுவாமி தரிசனம் செய்து வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.
இந்நிலையில், திடீர் ஆய்வு என்ற பெயரில் புதியதாக பொறுப்பேற்ற அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் காலங்காலமாக பக்தர்களுக்கு சேவை செய்து வரும் திருசுதந்திர அர்ச்சகர் சமுதாயத்தை சார்ந்த அர்ச்சர்களை இழிவுபடுத்தியது மிகவும் கண்டனத்துக்குரியது ஆகும்.
பல நூற்றாண்டுகளாக திருச்செந்தூர் திருக்கோயிலில் வேண்டுதலுடன் வருகின்ற பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கான வழிகாட்டுதலும் உதவியும் திருசுதந்திர அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.
பல வெளி ஊர்களிலும் வெளி மாநிலங்களிலும் பல்வேறு குடும்பங்களுக்கு கட்டளை ஐயர்களாக திருசுதந்திர அர்ச்சகர்கள் மரபுவழி பொறுப்பை நிறைவேற்றி வருகின்றனர்.
அறநிலையத் துறையை சார்ந்தவர் அல்லாத திருசுதந்திர அர்ச்சகர்கள் காலம் காலமாக மரபுவழியாக இந்த சுவாமி தரிசன உதவியை செய்து வருகின்றனர். பக்தர்கள் தரும் தட்சணையை பெறுகின்றனர்.
இந்த நிலையில், திருசுதந்திர அர்ச்சகர்கள் செய்யும் ஆன்மிகப் பணியை இழிவுபடுத்தியுள்ளார் அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ்.
அறநிலையத் துறை அமைச்சரின் இந்தச் செயல் திருசுதந்திர அர்ச்சகர் சமுதாயத்தினரிடம் பெரும் மன வேதனையை ஏற்ப்படுத்தியுள்ளது. மேலும் உள்ளூர் மக்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கான வழிமுறை பற்றிய எந்த அறிவிப்பும் வெளியிடாதது சரியானதல்ல என்று ஊர் மக்கள் கருதுகின்றனர்.
திருச்செந்தூர் தொகுதி அனைத்து சமுதாய மக்களின் நலனை வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு 7-வது முறையாக வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனது பணி இருந்துவரும் நிலையில் திருசுதந்திர அர்ச்சகர் சமுதாயத்தை இழிவுபடுத்தியதோடு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் புகழை சிறுமைப்படுத்திய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷுக்கு எனது வன்மையான கண்டனத்தை மீண்டும் அழுத்தமாக பதிவு செய்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ரமேஷ் பதில்:
இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களே... (உங்களை போல் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் போடும் வழக்கம் உண்மையில் பெரியாரை பின்பற்றுவர்களுக்கு கிடையாது) மக்களை சுரண்டி பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி, மத பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்கத்தான் மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர்.
பக்தர்களிடம் சட்டத்துக்கு புறம்பாக பணம் பெற்றுதான் சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, அப்படி செய்வது சேவையும் இல்லை, அதை எந்தக் கடவுளும் செய்ய சொல்லவும் இல்லை.
நேற்று வரை சாதியை வைத்து ஆதரவாக செயல்படுகிறேன் என்று திமுகவினர் பேசினீர்கள். இன்று அதே சாதியை சார்ந்தவர்களை அவமதித்து விட்டதாக பேசுகிறீர்கள்.
தவறு செய்தவர்களை தண்டித்தால் தங்களுக்கு எதற்காக திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என்பது தெரியவில்லை.
இன்னும் பல முறைகேடுகள் திருச்செந்தூர் திருக்கோயிலில் நடந்து வருவதை விரைவில் வெளிக்கொணர்வேன், அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்!” என்று அவர் தெரிவித்துள்ளார்.