அமைச்சர் ரமேஷ்
சென்னை: “பாஜக ஆளக்கூடிய மாநிலங்களிலும் கூட கோயில்களில் செல்போன் கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளது” என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியது: “மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் ஏற்கெனவே தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களிலும் செல்போன் தடை நடைமுறையில் இருந்து வந்தது.
குறிப்பாக, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்களில் செல்போன் கவுன்ட்டர்கள் வைத்து குறைந்தபட்ச கட்டணமாக ரூ.5-ம் பெறப்பட்டது.
இந்நிலையில், அதற்கான கவுன்ட்டர்களும், வசதிகளும் இல்லாமல் இருந்த 52 முதுநிலை கோயில்களில் கவுன்ட்டர் வசதிகள் கொண்டுவந்து தற்போது அதை நடைமுறைப்படுத்தியுள்ளோம். பாஜக ஆளக்கூடிய மாநிலங்களிலும் கூட செல்போன் கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளது.
கூட்டத்தைப் பொறுத்து, அந்தந்த திருக்கோயில்கள் அதற்கு தகுந்த முடிவுகள் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். அதேபோல் கர்ப்பிணிகள், குழந்தைகளை கையில் வைத்து கொண்டு வருபவர்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை கட்டுப்படுத்த தேவையில்லை.
பொதுமக்கள் அதிகம் வரும் விசேஷ நாட்களில் செல்போன் கவுன்ட்டர்களில், செல்போன் வாங்க வேண்டாம் என்றும் கோயில்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்தவர்களை இந்த வேலைக்கு பயன்படுத்துகிறோம். கட்டணம் பெறுவது அவர்களின் சம்பளத்துக்கு உபயோகப்படுத்தப்படும். மீதமிருந்தால் அன்னதானத்துக்கு செலவழிக்கப்படும். ஆனால், கோயிலில் கொள்ளையடிப்பது போல் இதை எதிர்க்கின்றனர்.
பக்தர்களுக்கு ஏதேனும் சிரமம் இருந்தால் நிச்சயமாக கருத்துருக்களை மக்களிடமிருந்து பெற்று மாற்று ஏற்பாடு செய்யப்படும். கோயில்களின் நிதிநிலையைக் கருத்தில்கொண்டு ரூ.5 கட்டணம் கூட வாங்க வேண்டுமா என்று எதிர்காலத்தில் முடிவு செய்யப்படும்” என்றார்.