தமிழகம்

மாசி மகாமக விழா ஏற்பாடுகள்: செப்.10 கும்பகோணத்தில் அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு

சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: “மாசி மகாமகத்தை ஒட்டி கும்பகோணத்தில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வரும் செப்.10-ம் தேதி ஆய்வு மேற்கொள்ள உள்ளார்” என வேளாண் அமைச்சர் வினோத் தெரிவித்தார்.

கும்பகோணத்தில் உள்ள வாய்க்கால்களில் பல ஆண்டுகளாக தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வாய்க்கால்களில் காவிரி நீர் செல்ல ஏதுவாக கும்பகோணம் கொட்டையூரிலிருந்து மேலக்காவேரி வரை 2.50 கி.மீ. தூரம் மண்டி உள்ள காட்டாமணி மற்றும் செடி கொடிகளை பொக்லீன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி இன்று நடைபெற்றது.

இந்த பணியினை வேளாண்மை துறை அமைச்சர் வினோத் கொடியசைத்து வைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், நீர்வளத்துறை உதவி செயற் பொறியாளர் முத்துமணி, உதவி பொறியாளர் கார்த்திகேயன், தவெக மாவட்ட பொருளாளர் விஜய சந்திரன், மாநகரச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இது தொடர்பாக வேளாண்மை துறை அமைச்சர் வினோத் கூறுகையில், “கும்பகோணம் காவிரி ஆற்றில் நடைபெற்று வரும் பணி, நீர் வருவதற்குள் முடிக்கப்படும். தமிழக முதல்வர் விஜய், கல்லணை காவிரி ஆற்று நீரை நேரில் வந்து திறப்பது தொடர்பாக கட்சித் தலைமையில் இருந்து அறிவிப்பு வெளியாகும்.

இப்போது கும்பகோணம் வாய்க்காலில் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களில் குடியிருப்புகளில் இருந்து வாய்க்காலில் விடும் கழிவுநீர் அடைக்கப்படும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.” என்றார்.

தொடர்ந்து அமைச்சரிடம், கும்பகோணம் ஆணையர் ‘கங்கையிலேயே பிரச்சினை இருக்கு, கும்பகோணம் பற்றி ஏன் இவ்வளவு கவலைப்படுகிறீர்கள்?’ என தாங்கள் ஆய்வுக்கு செல்லும்போது சொல்லியதாக கூறப்படுகிறதே எனக் கேட்டதற்கு? “இதுவரைக்கும் அப்படி ஒரு தகவல் எதுவும் சொல்லவில்லை. அப்படியே கங்கையில் தூர்வாராவிட்டால் என்ன, நம் ஊரில் நாம்தானே தூர்வாரி ஆக வேண்டும், இது தமிழ்நாடு.” என்றார்.

தொடர்ந்து, “கும்பகோணத்தில் மாசி மகாமக விழா நடைபெறுவது குறித்து வரும் செப்.10-ம் தேதி அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கும்பகோணத்தில் ஆய்வு மேற்கொண்டு, இந்த விழா தொடர்புடைய கோயில்களில் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். எனினும் 2028-ல் நடைபெற உள்ள மாசி மகாமக விழா மிகவும் சிறப்பாக நடைபெறும்” என்று அமைச்சர் வினோத் கூறினார்.

SCROLL FOR NEXT