தமிழகம்

‘ஒருமையில் பேசுவதா?’ - அமைச்சர் ராஜ்மோகன் ஆவேசம்

செய்திப்பிரிவு

சென்னை: ‘வாடா போடா என ஒருமையில் பேசுவதா?’ என சட்டப்பேரவை யில் பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் ஆவேசத்துடன் கூறினார்.

சட்டப்பேரவையில் நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நீர்வளத்துறை மற்றும் சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்நடந்தது.

அப்போது காவிரி விவகாரம் குறித்து திமுக உறுப்பினர் துரை சந்திரசேகரன் பேசியபோது அமைச்சர் அருண்ராஜ், காவிரி பிரச்சினையில் திமுகவை விமர்சித்து ஒரு வார்த்தையை குறிப்பிட்டார்.

அப்போது திமுக. உறுப்பினர்கள் அனைவரும் இருக்கையில் இருந்து எழுந்து நின்று தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

உடனே சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் எழுந்து, ‘இந்த வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டியதில்லை.

பேரவையில் மாண்பை மீறி திமுக உறுப்பினர்கள் எவ்வளவு அநாகரிமான முறையில் நடந்து கொள்கிறார்கள் என்பதை நேரடி ஒளிபரப்பில் நேரடியாக பார்க்க வேண்டும் என்று மக்கள்

ஆசைப்படுகிறார்கள்’ என்று கூறினார். இதனால் திமுக. உறுப்பினர்கள் எழுந்து சத்தமிட்டனர். பின்வரிசையில் அமர்ந்திருந்த திமுக எம்எல்ஏ ஒருவர், தனது இருக்கையை விட்டு எழுந்து ஆவேசமாக முன்னேறி வந்தார்.

பதிலுக்கு தவெக எம்எல்ஏ ஒருவரும் தனது இருக்கையில் இருந்து முன்னோக்கி வந்தார். இதனால் பேரவையில் அமளி ஏற்பட்டது. அப்போது திமுக உறுப்பினர் ஒருவர் பேரவைக்கு பொருத்தமில்லாத ஒரு வார்த்தையைக் குறிப்பிட்டார்.

அப்போது பள்ளிக்கல்வி, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆவேசமாக இருக்கையில் இருந்து எழுந்து, பதிலளிக்கையில், “வாடா, போடா என்று ஒருமையில் பேசுவது, பேரவை மரபுக்கு எதிராக பேசுவதையெல்லாம் அவர்கள் தவிர்க்க வேண்டும்.

எங்களைக் கட்டுப்பாடோடு வைப்பதற்கு எங்கள் வெற்றி தலைவர் கடைக்கண் பார்வை போதும். சட்டப்பேரவை நிகழ்ச்சியை நேரலையில் ஒளிபரப்பி கொண்டு வருகிறோம். அடிப்பதற்காக ஓடிவரும் திமுக உறுப்பினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

SCROLL FOR NEXT