சென்னை: தமிழகம் முழுவதும் ரூ.3,766 கோடியில் 28,551 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதாக அமைச்சர் ப.ராஜ்குமார் தெரிவித்தார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் வீட்டுவசதித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார், செயலர் இரா.கிர்லோஷ் குமார், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் கு.ப.கிருஷ்ணன், மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா பி.சிங் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அமைச்சர் ராஜ்குமார் பேசியதாவது: வாரியம் சார்பில் தமிழகம் முழுவதும் ரூ.3,766 கோடியில் 28,551 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
இதில் சென்னையில் ரூ.1,230 கோடியில் 7,179 குடியிருப்புகளும், இதர மாவட்டங்களில் ரூ.2,535 கோடியில் 21,372 குடியிருப்புகளும் இடம்பெறுகின்றன.
அதேபோல் ஆசிய வளர்ச்சி வங்கி திட்டத்தின் கீழ் ரூ.1,030 கோடியில் 5,457 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
மேலும் ரூ.210 கோடியில் 215 திட்டப்பகுதிகளில் புனரமைப்புப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. நலிந்த மக்களுக்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை நல்ல தரத்துடன் உருவாக்கி விரைவாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.