தமிழகம்

தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடுவதில் முரண் இல்லை: அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

செய்திப்பிரிவு, ஃபிலிப் பால்

சென்னை: ‘தமிழுக்கே முன்னுரிமை, தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து தேசிய கீதம் பாடுவதில் முரண் இல்லை’ என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது: இளைஞர்கள், இளம் பெண்கள் அதிகளவில் பங்கேற்ற, சமூக வாரியாக பிரதிநிதித்துவம் சமமாக இருக்கிற சமூக நீதி மன்றமாக சட்டப்பேரவை மாறியிருக்கிறது.

அதேபோல் அன்றும், இன்றும், என்றும் தமிழுக்குதான் முன்னுரிமை. அந்தவகையில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவை தொடங்கியிருக்கிறது. அதைத்தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

அரசு நிகழ்வில் வந்தே மாதரம் பாடப்பட வேண்டும் என மத்திய அரசு சுற்றறிக்கை விடுத்துள்ளது. ஆனால், தமிழக அரசை பொறுத்தவரை தமிழ்த்தாய் வாழ்த்து முதன்மையாக பாடப்பட வேண்டும். அதன்படி தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது.

அதைத்தொடர்ந்து தேசிய கீதம் பாடக்கூடாது என்பதில்லை. அவ்வாறு பாடப்படுவதில் முரண் இல்லை. எதிர்க்கட்சிகள் அவர்களது எதிர்ப்பை காட்டுவதற்கு இடம் கொடுப்பது தான் ஜனநாயகத்தின் அழகு.

அந்தவகையில் இன்றைக்கு திமுகவின் எம்எல்ஏக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். சிங்கப்பெண் சிறப்பு படையில் இருந்து பல்வேறு திட்டங்களை இந்த அரசு முன்னெடுத்து கொண்டிருக் கிறது. கடந்த 2024-ம் ஆண்டு சராசரியாக ஒரு நாளைக்கு 30 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவுசெய்யப்பட்டதாக கூறுகின்றனர்.

இன்றைக்கு அதைவிட வெகுவாக குற்றங்கள் குறைந்திருக்கின்றன. இன்றைக்கு பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் வெளியே வருவது அதிகரித்திருக்கிறது. எனவே, அவர்கள் கடந்த ஆட்சியில் இவ்வாறு பேட்ஜ் அணிந்து வந்திருக்கிற வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களில் முதல் தலைமுறை பட்டதாரியார், பெண்கள் படித்திருக்கிறார்களா? இல்லையா? என்பதெல்லாம் கணக்கெடுப்பும், கணக்காய்வும் நடந்தால்தான் தெரியவரும்.

மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். சாதிவாரி சமூகநீதி கணக்காய்வை மாநில அரசு நடத்த வேண்டும். இதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த இரண்டுமே நடைபெறும். சட்டப்பேரவைநல்ல முறையில் தொடங்கியிருக்கிறது.

இரண்டு, மூன்று ஆண்டுகளாக இருட்டடிப்பு செய்யப்பட்ட சட்டப்பேரவை நேரலை, மீண்டும் தொடங்கியுள்ளது. இனியும் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT