சென்னை: “சட்டப்பேரவையில் ஆளுநர் பேசும்போது மைக் ஆஃப் செய்யப்பட்டதாக கூறுவது பொய். எதிர்க்கட்சிகளே சொல்லாத குற்றச்சாட்டுகளை ஆளுநர் கூறுகிறார்” என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஒன்றிய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய ஆளுநர் பாஜகவின் பிரதிநிதியாக சட்டப்பேரவைக்கு வந்து சென்று இருக்கிறார்.
நமது மரபு குறித்து கடந்த மூன்று ஆண்டுகளாக அவரிடம் எடுத்துரைத்திருக்கிறோம். அதாவது சட்டப்பேரவை தொடங்கிய பின்னர் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். பின்னர் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும் இதுதான் மரபென்று.
தமிழக அரசு எழுதிக் கொடுத்த அறிக்கையை படிக்கும்படி ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால் அவர் அதை வாசிக்கவில்லை. சபாநாயகர் இன்று அவரிடம் எவ்வளவு தாழ்ந்து போய் கேட்க முடியுமோ அப்படித்தான் கேட்டார். நாங்கள் அனைவரும் அமைதியாக இருந்தோம். ஆனால் ஆளுநர் உரையை வாசிக்காமல் சென்றுவிட்டார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் பேசும்போது மைக் ஆஃப் செய்யப்பட்டதாக கூறுவது பொய். எதிர்க்கட்சிகளே சொல்லாத குற்றச்சாட்டுகளை அவர் கூறுகிறார். தேர்தல் வருவதால் தமிழ்நாடு அரசுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் ஆளுநர்.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்குக்கு கொண்டு வந்திருக்கிறோம் என ஒன்றிய அரசே சொல்கிறது. ஆனால் தவறான தகவல்களை ஆளுநர் சொல்கிறார். தமிழகத்தில் தொழில் வளர்ச்சி குறித்து ஆளுநர் பொய்யான தகவலை கூறுகிறார்.
ஆளுநர் வெளியேறிய உடனே, அறிக்கை விடுகிறார். அந்த அறிக்கையை முன்பே தயாரித்து வைத்திருக்கிறார். அவரின் அறிக்கை உண்மைக்குப் புறம்பானது. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.9 ஆக இருக்கிறது. இதை மூடி மறைக்க யாராலும் முடியாது. தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தைரியத்தை வளர்த்து விடுகிறார்கள். உங்களுக்கு எதிராக குற்றங்கள் இழைக்கப்பட்டால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும், அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.
கடந்த ஆட்சியில் புகார் அளித்தால் அதைக் கேட்க நாதி இல்லை. ஆனால் இந்த ஆட்சியில் புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதனால் மக்கள் தைரியமாக புகார் அளிக்க வரக்கூடிய சூழலை இந்த அரசு ஏற்படுத்தி இருக்கிறது.
போதைப்பொருள் உற்பத்தி தமிழகத்தில் இல்லை. போதைப்பொருள் எங்கிருந்து வருகிறதென்று உங்களுக்கே தெரியும்.
ஒன்றிய அரசு எப்படி போதைப்பொருளை உள்ளே வரவிடுகிறது. அதை முதலில் கேள்வி கேளுங்கள். தமிழகத்தின் அனைத்து எல்லைகளிலும் போதைப்பொருள் குறித்து கண்காணிக்கப்படுகிறது. அதிகமான போதைப் பொருள்களை எல்லைகளிலே நாங்கள் கைப்பற்றுகிறோம். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளை அழைத்து போதைப் பொருள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் எவ்வளவு? இது தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள் எவ்வளவு என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே இது போன்ற மீட்டிங் நடக்கக் கூடிய ஒரே மாநிலம் தமிழகம் தான்.
38 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இருக்கக்கூடிய நாட்டில் தமிழகத்தில் 18 பல்கலைக்கழகங்கள் தரம் உயர்ந்த பல்கலைக்கழகமாக இருக்கிறது. உயர்க்கல்வி படிக்கக்கூடிய பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடிய மாநிலம் தமிழகம். கல்வியின் தரம் தாழ்ந்து இருந்தால் இவை சாத்தியமா?. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் பன்மடங்கு கல்வி வளர்ச்சி அதிகரித்துள்ளது.
எல்லாவற்றிலும் வல்லவன் தான் ஒரு ‘சூப்பர் மேன்’. எல்லாவற்றிலும் வலிமை படைத்தவராக எங்களின் முதல்வர் இருக்கிறார். அவரை நாங்கள் ‘சூப்பர் முதல்வர்’ என்று சொல்வதில் தவறில்லை. தமிழகத்தை இந்த ஐந்தாண்டு காலத்தில் வளர்ச்சிப் பாதையில் கொண்டு வந்திருக்கிறோம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.