அமைச்சர் ரகுபதி (இடது), எடப்பாடி பழனிசாமி (வலது) 
தமிழகம்

“கட்சி நிலைபாட்டையே மறந்துவிட்டார் இபிஎஸ்” - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அமைச்சர் ரகுபதி சாடல்

டெக்ஸ்டர்

சென்னை: திருப்பரங்குன்றம் சம்பவத்தின் மூலம் தான் முழு அடிமை என்பதை நிரூபித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தன்னுடைய கட்சி நிலைப்பாட்டையே அவர் மறந்துவிட்டார் என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உலகெங்கும் இருக்கும் தமிழர்கள் கார்த்திகை தீபத்தை கொண்டாடுகிறார்கள். இதில் இந்துத்துவாவுக்கு எந்த வேலையும் கிடையாது. ஆனால் கார்த்திகை தீபத்தை ஒட்டி புதிய பிரச்சினையை கிளப்பும் நோக்கில் நீதிமன்றத்தை அணுகி இருக்கிறார்கள். திருப்பரங்குன்றத்தில் எந்த இடத்தில் தீபம் ஏற்றுகிறோமோ அந்த இடத்திலேயேதான் தொடர்ந்து ஏற்ற வேண்டும் என்று 2014-ம் ஆண்டிலேயே தீர்ப்பு வந்திருக்கிறது.

நாங்கள் சட்டத்தை மதிப்பவர்கள், சட்டத்தின் ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கிறது. 2014-ம் ஆண்டு இரண்டு நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பின் மீது எந்த மேல்முறையீடும் இல்லாமல் இன்று ஒரு தனி நீதிபதியின் தீர்ப்பை கொண்டு வந்தால் அதை எப்படி அனுமதிக்க முடியும்?

2014 தீர்ப்பின் படி நாங்கள் செயல்படுகிறோம். அதை மறந்துவிட்டு பேசுபவர்கள் மீது எந்தவித வழக்கையும் தமிழ்நாடு அரசால் தொடுக்க முடியும். தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகள் அல்ல. இந்தியாவிலேயே மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக திகழும் இடம் தமிழ்நாடுதான். எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வேலையே கிடையாது.

தமிழக அரசின் மீது ஏதாவது குற்றச்சாட்டு சொல்வதுதான் அவருடைய ஒரே பணி. இந்த விவகாரத்தில் தமிழர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் ஆதரவாக இருக்க வேண்டியவர், இந்துத்துவ கைகூலிகளுக்கு அடிமையாகி இருக்கிறார் என்பதை இதன் மூலமாக நிரூபித்திருக்கிறார்.

ஜெயலலிதா இருந்தபோது இப்போது தீபம் ஏற்றும் இடத்தில்தான் ஏற்ற வேண்டும் என்று இதே அதிமுக வாதாடி இருக்கிறது. ஆனால் இன்றைக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டார்கள். திருப்பரங்குன்றம் சம்பவத்தின் மூலம் தான் முழு அடிமை என்பதை அவர் நிரூபித்திருக்கிறார். தன்னுடைய கட்சி நிலைப்பாட்டையே மறந்துவிட்டார். அதிமுக தொண்டர்கள் வெட்கப்பட வேண்டும்” இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

நடந்தது என்ன? - திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த உத்தரவு தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று தள்ளுபடி செய்தது.

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கை மீண்டும் ஜி.ஆர்.சுவாமிநாதனே விசாரிப்பார் எனவும் உத்தரவிட்டது.

இதனையடுத்து, இந்த வழக்கை இன்று மாலை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றத்தில் அமலில் இருந்த 144 தடை உத்தரவை ரத்து செய்தார். மேலும், “இன்று மாலையே திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும். மனுதாரர் 10 பேருடன் சென்று தீபமேற்ற பாதுகாப்பு அளிக்க வேண்டும். தீபம் ஏற்றி நாளை காலை 10.30 மணிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும். காவல் துறை பாதுகாப்பு தராவிடில் கடும் உத்தரவு பிறப்பிக்கப்படும். நாளை காலை 10 மணிக்கு காவல் காவல் ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

இந்த உத்தரவைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்ற பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் தீவிரம் காட்டினர். ஆனால், மேல்முறையீடு செய்யவுள்ளதால் தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது என காவல் துறை தெரிவித்தது. இதனால் பாஜகவினர் மற்றும் இந்து அமைப்புகள் திருப்பரங்குன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT