| படம்: எல்.சீனிவாசன் |
சென்னை: தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தமிழ்நாடு தொழில்நுட்ப பரிமாற்ற மாநாடு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த மாநாட்டை உயர்கல்வித் துறை அமைச்சர் பி.விஸ்வநாதன் தொடங்கிவைத்து பேசியதாவது: உயர்கல்வித் துறை செயலரின் ஆலோசனையை ஏற்று இந்த மாநாடு இனிமேல் ஆண்டுதோறும் நடத்தப்படும்.
சென்னையில் மட்டுமின்றி மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களிலும் நடத்துவோம். மத்திய அரசின் நிதி ஆயோக் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, தமிழகம் 16,046 காப்புரிமை விண்ணப்பங்களை சமர்ப்பித்தும், 44,611 ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.
புதிய கண்டுபிடிப்புகள் உற்பத்தி நிலையை எட்டி மக்களைச் சென்றடைய, காப்புரிமை பெறுவது அவசியம். அதற்கு மாநில அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் பல வழிகளில் உதவுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
உயர்கல்வித் துறை செயலர் தீரஜ்குமார் பேசும்போது, “தொழில்நுட்ப மேம்பாடு முக்கியமானது. அதேநேரம், தொழில்நுட்பங்கள் வணிக ரீதியில் உற்பத்தி நிலையை அடைவதும் முக்கியமானது. சீனாவில் 80 முதல் 90 சதவீத தொழில்நுட்பங்கள் உற்பத்தி நிலையை அடைந்து விடுகின்றன” என்றார்.
தமிழகத்தில் புவிசார் குறியீடு (ஜி.ஐ) பெற்ற பொருட்களின் விவரங்கள் அடங்கிய நூலை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டார். அவரது முன்னிலையில் பல்வேறு நிறுவனங்களுடன் 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
முன்னதாக, தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப கவுன்சில் உறுப்பினர்-செயலர் எஸ்.வின்சென்ட் வரவேற்று பேசும்போது, “கண்டுபிடிப்பாளர்கள் தங்கள் தொழில்நுட்பங்களுக்கு காப்புரிமை பெற தொழில்நுட்ப கவுன்சில் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.
97 தொழில்நுட்பங்கள் உற்பத்தி நிலைக்கு தயார்நிலையில் உள்ளன” என்றார். கவுன்சில் அறிவியல் அலுவலர் அ.ரமணன், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் வி.குமரேசன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், தொழில் துறையினர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஸ்வநாதன், “பல்கலைக்கழகங்களில் தற்காலிக ஏற்பாடாக பொறுப்பு துணைவேந்தர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிரந்தர துணைவேந்தர் நியமனம் குறித்து விரைவில் நல்ல செய்தி வரும்’’ என்றார்.