தமிழகம்

“விஜய்யை தேவையில்லாமல் ஸ்டாலின் வம்புக்கு இழுக்கிறார்” - அமைச்சர் பெ.விஸ்வநாதன் குற்றச்சாட்டு

சுப.ஜனநாயக செல்வம்

மதுரை: முன்னாள் முதல்வர் ஸ்டாலின் எப்போது பார்த்தாலும் முதல்வரை தேவையில்லாமல் வம்புக்கு இழுப்பது, சண்டைக்கு இழுப்பது, சீண்டிப் பார்ப்பது எல்லாம் உகந்த அரசியலாக பார்க்கவில்லை என அமைச்சர் பெ.விஸ்வநாதன் தெரிவித்தார்.

மதுரை மேலூரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 149 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.19.89 கோடியில் தொழில் முனைவோருக்கான வங்கி நிதி இணைப்பு ஆணைகள் வழங்கும் விழா ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் பெ.விஸ்வநாதன் பங்கேற்று ஆணைகளை வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழக அரசை ‘ரெட் அலர்ட்’ என கவிஞர் போல் மு.க.ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். அவருக்கு கவிதை நடை கொஞ்சம் தாராளம். அடிக்கடி கவிஞராக மாறி விடுகிறார். ஏன் இப்படி செய்கிறார் எனத் தெரியவில்லை. ஆட்சி தொடங்கி 6 மாதம் கூட அவகாசம் கொடுக்காமல் அரசாங்கம் தொடங்கிய நாள் முதல் சண்டைக்கு இழுத்துக்கொண்டே இருக்கிறார். இது ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்காது.

தமிழக அரசு மக்கள் பணியாற்றுவதில் மிக கவனமாக இருக்கிறது. கடந்த 6 மாதங்களில் அமைச்சர்கள் ஓய்வெடுக்காமல் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருக்கின்றனர். இரவு பகல் பாராமல் மக்கள்நலத் திட்டங்களை செய்து வருகின்றனர்.

ஆனால், தேவையில்லாமல் எப்போது பார்த்தாலும் முதல்வரை வம்புக்கு இழுப்பது, சண்டைக்கு இழுப்பது, சீண்டிப் பார்ப்பது எல்லாம் உகந்த அரசியலாக நான் பார்க்கவில்லை. அரசியல் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும், தேவையில்லாமல் ‘ரெட் அலர்ட்’ என விமர்சிப்பது தவறு. ரெட் அலர்ட், ஒயிட் அலர்ட், எல்லோ அலர்ட் என என்னங்க கதை இது.

அரசு முறையாகவும், கவனமாகவும் செயல்படுகிறது. என்னைப் பொறுத்தவரை 1967 காமராஜர் அரசுக்குப் பின்னால் ஒரு நல்ல அரசாக, மக்கள் அரசாக செயல்படுகிறது. மக்களின் முதல்வராக விஜய் செயல்படுகிறார். அவருக்கு மேலூர் சட்டப்பேரவைத் தொகுதி மக்கள் சார்பில் இதயப்பூர்வமான தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT