தமிழகம்

மேற்கூரை சூரிய மின் திட்டங்களை விரைவுபடுத்த ஒருங்கிணைந்த செயலி: அமைச்சர் நிர்மல்குமார் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: மேற்கூரை சூரியமின் திட்​டங்​களை விரைவுபடுத்த ஒருங்​கிணைந்த செயலி அறி​முகப்​படுத்​தப்​படும் என, அமைச்​சர் சி.டி.ஆர்​.நிர்​மல்​கு​மார் தெரி​வித்​தார்.

தமிழ்​நாடு மின்​சாரவாரி​யம் மற்​றும் சென்னை ஐஐடி இடையே தொழில்​நுட்ப ஒத்​துழைப்​புக்​காக மேற்​கொள்​ளப்​பட்ட புரிந்​துணர்வு ஒப்​பந்​தத்​தின் தொடர்ச்​சி​யாக, மின்துறை அமைச்​சர் சி.டி.ஆர்​.நிர்​மல்​கு​மார் சென்னை ஐஐடி வளாகத்​துக்கு நேற்று சென்று பல்​வேறு நவீன மின்​சார தொழில்​நுட்​பங்​களை ஆய்​வு செய்​தார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் கூறிய​தாவது: தமிழகத்தை இந்​தி​யா​வின் முன்​னணி பசுமை எரிசக்தி மாநில​மாக மாற்​றும் நோக்​கில் பல்​வேறு முக்​கிய நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

உலகத் தரத்​திலான மின்கல ஆற்​றல் சேமிப்பு அமைப்பு மற்​றும் பேட்​டரி மறுசுழற்சி தொடர்​பான விரி​வான புதிய கொள்கை ஐஐடி சென்னை நிபுணர்​களு​டன் இணைந்து விரை​வில் வெளி​யிடப்​படும்.

மின்​கட்​டமைப்​பின் தேவையை கருத்​தில் கொண்​டு, ஆய்​வின் அடிப்​படை​யில் புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்தி திட்​டங்​களுக்கு வெளிப்​படை​யான மற்​றும் அறி​வியல் சார்ந்த அனு​மதி நடை​முறை செயல்​படுத்​தப்​படும்.

மேற்​கூரை சூரியமின் திட்​டங்​களை விரைவுபடுத்​தும் வகை​யில், பொது​மக்​கள் எளி​தில் பயன்​பெறும் புதிய கொள்​கை, எளிய அனு​மதி நடை​முறை மற்​றும் ஒருங்​கிணைந்த செயலி அறி​முகப்​படுத்​தப்​படும்.

இதன்​மூலம், மானி​யம், மீட்​டர் பொருத்​துதல், அங்​கீகரிக்​கப்​பட்ட நிறு​வனங்​கள் உள்​ளிட்ட அனைத்து சேவை​களும் ஒரே தளத்​தில் கிடைக்க ஏற்​பாடு செய்​யப்​படும்.

தமிழ்த்​தாய் வாழ்த்​து

தமிழ்த்​தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்​டும் என்​பது​தான் எங்​களின் எண்​ணம். தொடர்ந்து தமிழக அரசு இதற்​கான அழுத்​தத்தை வழங்​கும்.

தமிழகத்​தில் தமிழ்த்​தாய் வாழ்த்​துக்கு முன்​னுரிமை அளிக்​கப்​படும்.

இவ்​விவ​காரத்​தில் ஆளுநர் மாளிகை வழி​காட்​டு​தல் ஏற்​புடையதல்ல. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பங்​களுக்கு வழங்​கப்​பட்ட அரசுப் பணி ஆணையை மதுரை உயர் நீதி​மன்​றம் ரத்து செய்​துள்​ளது.

இந்த தீர்ப்​புக்​கான நகல் வந்​தவுடன் ஆலோ​சனை மேற்​கொள்​ளப்​பட்டு சட்​டப்​படி நடவடிக்கை எடுக்​கப்​படும். மேகே​தாட்டு அணை விவ​காரத்​தில் கர்​நாடகா அரசு தன்​னிச்​சை​யாக எந்​த​வித கட்​டு​மானத்​தை​யும் மேற்​கொள்ள உச்ச நீதி​மன்​றம் அனு​ம​திக்​க​வில்​லை.

கட்​டு​மானத்தை மேற்​கொள்ள எந்​தத் தடை​யும் உச்ச நீதி​மன்​றம் விதிக்​க​வில்லை எனக் கூறும் கருத்து தவறானது. விரி​வான திட்ட அறிக்​கைக்கு மட்​டுமே அனு​ம​தித்​துள்​ளனர்.

எந்த மா​திரி​யான முயற்​சிகள் மேற்​கொண்​டால் அணை​கட்​டும் நடவடிக்​கையை தடுக்க முடியும் என முதல்​வர்

தொடர்ச்​சி​யாக அதி​காரி​களு​டன் ஆலோ​சனை நடத்​தி வரு​கிறார்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT