தமிழகம்

“இடைத்தேர்தலுக்கும் கரூர் நிகழ்வுக்கும் தொடர்பு இல்லை” - அமைச்சர் நிர்மல் குமார்

தமிழினி

மதுரை: “இடைத்தேர்தலுக்கும் கரூர் நிகழ்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று அமைச்சரும், தவெக மூத்த தலைவருமான நிர்மல் குமார் தெரிவித்தார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “திமுக, அதிமுகவுக்கு அரசியல் எதிர்காலமே கிடையாது. இரண்டு கட்சி தலைவர்களும் சுயலாபத்துக்காக, குடும்ப நலனுக்காகவும் இணைந்து பயணிக்க தயாராகி விட்டனர். இதனால் இந்த தலைமைகளின் மீது நம்பிக்கை இழந்து, ஒவ்வொரு நாளும் மாவட்ட செயலாளர்களும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும் எங்கள் கட்சியில் இணைகின்றனர். அனைவருக்கும் தேவையான மரியாதையும், அங்கீகாரமும் கொடுக்கப்படும்.

டிடிவி தினகரன் எதற்காக கட்சி ஆரம்பித்தார்? ‘ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் துரோகிகள்; எடப்பாடி பழனிசாமியை நான் காலி செய்வேன்’ என்று கூறினார். தற்போது பழனிசாமியை முதல்வராக்குவேன் எனச் சொல்லி வருகிறார். டிடிவி தினகரன் தன்னுடன் பயணித்த ஆதரவாளர்களை ரோட்டில் விட்டு சென்றுவிட்டார்.

எடப்பாடி பழனிசாமியும், ஸ்டாலினும் ஒன்றாக இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என மக்கள் தீர்ப்பளிப்பார்களா? மக்களின் தீர்ப்பே விஜய் முதல்வராக வேண்டும் என்பதுதான். ஒரு சில இடங்களில் அவர்கள் வெற்றி பெற்று இருக்கலாம். இவர்கள் இணைந்து பயணிக்க இருந்ததை அனைவரும் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், அவர்களால் அதை மறுத்து பேச முடியவில்லை.

டிடிவி தினகரனுக்கு எனக்கு எல்லாமே புரியும். ஆனால், அவர் காலத்துக்கு ஏற்ப, தண்ணீர் போவது போல வளைந்து நெளிந்து செல்வார். யாரை துரோகி என சொல்லி கட்சி ஆரம்பித்தாரோ அவருக்காக ஆளுநர் மாளிகையில் நின்றாரே... அவர் பேசாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

கரூர் சம்பவம் மிகப் பெரிய உயிரிழப்பு சம்பவம். இது ஒரு சதித் திட்டத்தால் நிகழ்த்தப்பட்டது. சம்பவம் நடந்தபோது கரூர் எஸ்.பி என்னுடன்தான் இருந்தார். ‘சம்பவத்தில் யார் உயிரிழந்தார்கள், மருத்துவமனையில் எத்தனை பேர் இருந்தனர்’ என்பது குறித்து எஸ்.பி.க்கே தெரியவில்லை. ‘ஏதேனும் அசம்பாவிதம் நடந்ததா அல்லது சுவர் ஏதேனும் இடிந்து விழுந்ததா?’ என எஸ்.பி.யிடம் கேட்டேன்.

அதற்கு அவர், ‘அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை சார். இரண்டு மூன்று பேர் மயக்கம் அடைந்துள்ளனர்’ என தெரிவித்தார். கரூர் எஸ்.பி-க்கே தெரியாத விஷயம் செந்தில் பாலாஜிக்கு எப்படி தெரியும்?

செந்தில் பாலாஜி மருத்துவமனை அருகில் ரூம் போட்டு காத்துக் கொண்டிருந்தாரா? சம்பவம் நடந்து முடிந்த ஐந்து நிமிடங்களில் அவர் எப்படி அந்த இடத்துக்கு வந்தார்?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “மத்திய அரசை எங்கு எதிர்க்க வேண்டுமோ, அங்கு எதிர்ப்போம். பாஜக தான் எங்களுக்கு கொள்கை எதிரி. அதில் எந்த சமரசமும் இல்லை” என்றார்.

கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கியது இடைத்தேர்தலைக் குறிவைத்துதான் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், “மக்களின் ஆதரவு எங்களுக்கு இருப்பதால் ஒட்டுமொத்த கட்சியும் தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம். இடைத்தேர்தலுக்கும் கரூர் நிகழ்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. யார் உண்மையான தலைவர்கள், ஊழல்வாதிகள் என மக்களுக்கு தெரியும்” என்றார்.

முன்னதாக, கருரில் நேற்று பேசிய முதல்வர் விஜய் தனது உரையில், “இடைத்தேர்தலில் திமுகவை நன்றாக வைத்து வெளுத்துவிடுங்கள்” என்று முழங்கியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT