மதுரை: அமைச்சர் நிர்மல்குமாருக்கு சொந்த மாவட்டம் மதுரையாக இருந்தாலும் அவர் மாநில அரசியலில் காட்டும் ஆர்வத்தை மாவட்ட அரசியலில் காட்டுவதில்லை. இதனால் பல அதிகார மையங்கள் உருவாகியுள்ளதால், அதிகாரிகள் யார் சொல்வதைப் பின்பற்றுவது எனத் தெரியாமல் நெருக்கடியில் தவிப்பதாக கூறப்படுகிறது.
மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நடுமுதலைகுளத்தை சேர்ந்தவர். ஆனால், அவரது மனைவி ஆசிரியராக சென்னையில் பணிபுரிந்து வருவதால் அவர் குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறார். அதற்கு வசதியாக தவெக-வில் மட்டுமல்லாது, அதற்கு முன் அதிமுக, பாஜகவில் இருந்தபோதும் அவர் மாநில அரசியலிலேயே கவனம் செலுத்தி வந்தார்.
சட்டப்பேரவை தேர்தலில், யாரும் எதிர்பாராத வகையில் அவரது சொந்த மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று அமைச்சராகவும் ஆனார். மேலும் மதுரை மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் உள்ளார். நிர்மல்குமார் அமைச்சரான தோடு தவெக அரசின் முக்கிய அதிகார மையமாகவும் இருப்பதால், அவர் மதுரையில் மீண்டும் நிரந்தரமாக தங்கி, அவரது தொகுதிக்கு மட்டமல்லாது, சொந்த மாவட்டத்துக்கும் முக்கிய திட்டங்களை கொண்டு வருவார் என மதுரை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சட்டப்பேரவை விவாதங் களிலும், பொதுவெளியில் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதிலும் திமுகவுக்கும், மற்ற எதிர்க்கட்சிகளுக்கும் சவாலாக திகழ்கிறார். அதனால், தவெக ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே அக்கட்சியில் அமைச்சர்கள் ஆன்ந்த், ஆதவ் அர்ஜூனாவுக்கு அடுத்த இடத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளார். ஆனால், அமைச்சர் நிர்மல்குமாருக்கு மாநில அரசியலில் இருக்கும் ஆர்வம், மாவட்ட அரசி யலில் இல்லை என்ற நிலையே உள்ளது. இதற்கு மாவட்ட தவெக எம்எல்ஏக்களுக்கு இடையே நீடிக்கும் கோஷ்டி பூசல் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
இதைப் பயன்படுத்தி மதுரை மாவட்டத்தில் தவெக மட்டுமல்லாது கூட்டணி கட்சிகள், ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகள், அமைப்புகள் என பல அதிகார மையங்கள் உருவாகிவிட்டன.
நிர்மல்குமார் ஆர்வம் காட்டாத சூழலில் மதுரை மாவட்டத்தில் அரசு அதி்காரிகள் யார் சொல்வதை கேட்பது எனத் தெரியாமல் குழப்பம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட அரசு அதிகாரிகள் சிலர் கூறுகையில், மதுரை மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் இருந்தாலும் அவர்கள் பங்கேற்கும் அரசு விழா நிகழ்ச்சிகள், ஆய்வுக் கூட்டங்கள், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் மிகக் குறைவாக இருக்கின்றன.
அமைச்சராக இருப்பவர்கள், தனது தொகுதிக்குள்ளேயே முடங்கிவிடாமல் மாவட்ட முழுவதும் பயணித்து, பொது மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து அதிகாரிகளுக்குப் பரிந்துரை செய்தல், அரசின்நலத்திட்டப் பணிகளை ஆய்வு செய்தல் உள்ளிட்டவற்றில் ஈடுபட வேண்டும். நிர்மல்குமாருக்கு மாவட்ட அரசியலிலும், மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்களில் உள்ள அதிகாரிகளை வழிநடத்துவதிலும் பெரிய அளவில் ஆர்வம் இல்லை. விடுமுறை நாட்களில் கூட சில நேரங்களில் சென்னையிலேயே முடங்கி விடுகிறார்.
மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா செப்.17-ம் தேதி நடைபெற உள்ளது. இதுவரை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணையர் கவுரவ்குமார் ஆகியோர் மட்டுமே சென்று அங்கு நடக்கும் பணிகளை பார்வையிட்டுள்ளனர்.