தமிழகம்

6 மாதத்துக்குள் ஒரு லட்சம் வீடுகளில் சூரியசக்தி மின் இணைப்பு: அமைச்சர் நிர்மல்குமார் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: ‘தமிழகத்தில் அடுத்த 6 மாதங்களுக்குள் ஒரு லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித் துள்ளார்.

சென்னை அண்ணாசலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு பசுமைஎரிசக்தி கழகம் சார்பில் தமிழ்நாடு சூரியசக்தி இணையதளம் (https://tnebltd.gov.in/usrp/) மற்றும் பொதுமக்கள் வீடுகள்தோறும் மேற்கூரை சோலார் திட்டத்தை தெரிந்துகொண்டு, விண்ணப்பிக்கும் வகையில் ‘தமிழ்நாடு மேற்கூரை சூரியசக்திமானியத்திட்டம்’ ஆகியவற்றை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி அமைப்புகளை உயர்த்தும் விதமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஒரே இணையதளம் மூலம் சுலபமாக பதிவு செய்யலாம். மத்திய, மாநில அரசின் மானியம் இதில் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஒரு லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைபாடுகளைத் தெரிவிக்கவும் போர்ட்டலில் வசதி உள்ளது” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது: இந்தத் திட்டத்தில் ஒரு கிலோ வாட்டுக்கு மத்திய அரசு ரூ.30 ஆயிரமும், மாநில அரசு ரூ.5 ஆயிரமும் வழங்குகிறது.

3 கிலோ வாட்டுக்கு மத்திய அரசு ரூ.78 ஆயிரமும், மாநில அரசு ரூ.22 ஆயிரமும் வழங்குகிறது. ஸ்மார்ட் மீட்டர் பணிகளை முதலில் எங்கு தொடங்குவது என்று ஆலோசித்து வருகிறோம்.

உப்பூர் அனல் மின்நிலையத்தில் ரூ.1,500 கோடியில் கட்டுமானப் பணிகள் முடிந்துள்ளன. ஆனால், 6 ஆண்டுகளாக உற்பத்திப் பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அவற்றைத் தொடங்க ரூ.15 ஆயிரம் கோடி தேவைப்படும்.

கொளத்தூர் மக்களுக்கு நன்றி சொல்லி அரசியலுக்கு எண்டு கார்டு போட்டுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ஜெம் கிரானைட் பிரச்சினையில் ஆதாரம் இருந்தும் எதனால் நடவடிக்கை எடுக்காமல் திமுக ஆட்சி காலத்தில் மூடி மறைக்கப்பட்டது.

இதற்கு ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும். யார் யாரிடம் பணம் வாங்கி கொண்டு தப்பிக்க விட்டார்கள். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தெரியாமல் இவ்வளவு பெரிய சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT