அமைச்சர் நிர்மல் குமார்
மதுரை: “மதுரை மக்கள் மீது கொண்ட தனி அக்கறை காரணமாகவே ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதல்வர் விஜய் இங்கு தொடங்கி வைக்கிறார்,” என்று சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் நடைபெறும் திட்டத் தொடக்க விழா ஏற்பாடுகளைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரை மக்களின் அன்பைப் பெற்ற முதல்வர், அவர்களது சகோதரராக இங்கு வருகிறார். இந்தத் திட்டத்தை மதுரையில் தொடங்க வேண்டும் என்பது முதல்வரின் விருப்பம்.
முதல்வர் வருகையையொட்டி பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் வழக்கமாக பேனர்கள் வைக்கப்படுவது உண்டு. ஆனால் மதுரையில் முதல்வர் செல்லும் வழித்தடங்களில் பேனர்கள், கொடிகள் வைக்கப்படவில்லை. பொதுமக்களின் பாதுகாப்பை மட்டுமே கருத்தில் கொண்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மருத்துவமனையின் வழக்கமான செயல்பாடுகளுக்கும், நோயாளிகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ்களின் வழக்கமான போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் சென்று வருகிறது.
விழா நடைபெறும் அரங்கில் குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் பயனாளிகள் மட்டுமே பங்கேற்கின்றனர். மதுரையில் பாதாள சாக்கடைத் திட்டத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக நிலுவையில் இருந்த புற்றுநோய் மருத்துவமனைத் திட்டத்துக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரையில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் லா ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் அமைப்பதற்கான இடம் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதுபோன்ற மேலும் பல திட்டங்கள் மதுரைக்கு வர உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.