அமைச்சர் நிர்மல் குமார்

 
தமிழகம்

“தவெகவினர் பெயரில் திமுகவினர் ஃபேக் ஐடி...” - பேரவையில் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை: “தவெகவைச் சேர்ந்தவர்கள் பெயரில் சமூக வலைதளங்களில் திமுகவினர் போலியான ஐடிகளை உருவாக்கி பெண்கள் குறித்து தவறாக பதிவிடுகின்றனர்” என்று சட்டப் பேரவையில் அமைச்சர் நிர்மல் குமார் குற்றம்சாட்டினார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தேமுதிக உறுப்பினர் பிரேமலதா பேசும் போது, “பெண்கள் குறித்து யாரும் தவறாக பேசக் கூடாது. அப்படி பேசினால் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். அதனை வரவேற்கிறேன்.

சமூக வலைதளங்களில் பெண் தலைவர்கள், பெண்கள் குறித்து தவறாக பதிவு செய்வதில் தவெகவை சேர்ந்தவர்களும் உள்ளனர். முதல்வர் கவனத்தில் கொண்டு தவெகவை சேர்ந்தவர்களை கண்டிக்க வேண்டும். காவல் துறையினருக்கு முக்கிய அறிவிப்புகள் இல்லை. முதல்வர் அறிவிக்க வேண்டும்” என்றார்.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் பேசுகையில், “முதல்வர் சொன்னது எங்கள் கட்சியினரையும் சேர்த்து தான். பெண்கள் குறித்து யார் தவறாக பேசினாலும், அது எங்கள் கட்சியினராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

திமுகவினர் எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் பெயரில் சமூக வலைதளங்களில் போலியான ஐடிகளை உருவாக்கி தவறாக பதிவிடுகின்றனர். திமுகவினர் 10 ஆண்டுகளாக என்ன செய்கிறார்களோ, அதையேதான் இப்போதும் செய்து கொண்டுள்ளனர். எப்படி விஜயகாந்துக்கு செய்தார்களோ அதேபோல் திமுகவினர் செய்து வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

இதையடுத்து நீர்வளத் துறை அமைச்சர் என்.ஆனந்த் பேசுகையில், “எங்கள் கட்சியில் அதுபோல் செய்தவர்களை நாங்கள் கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறோம்” என்றார்.

SCROLL FOR NEXT