சென்னை: தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலர்களின் திறனாய்வுக் கூட்டம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது பர்வேஸ் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அமைச்சர் முகமது பர்வேஸ் பேசியதாவது: தமிழகத்தில் உள்ள 55,214 தொழிற்சாலைகளில் 27.72 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். மேலும், 3,611 கட்டுமானப் பணியிடங்களில் சுமார் 5 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.
தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான பணியிடங்களில் பணிபுரியக் கூடிய ஒவ்வொரு தொழிலாளரின் பாதுகாப்பு, உடல்நலன் மற்றும் நலவசதிகளில் சிறப்பு கவனம் செலுத்தப்படுவதை அலுவலர்கள் தங்களின் ஆய்வின் போது உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து அலுவலர்களும் நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடன் எவ்வித புகாருக்கு இடமளிக்காத வகையில் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். இத்துறையில் அனைத்து சேவைகளும் இணையவழி வாயிலாக மட்டுமே வழங்கப்பட வேண்டும்.
21 குழுக்கள் அமைப்பு
அமோனியா பயன்படுத்தும் தொழிற்சாலைகளில் அபாயகரமான சூழ்நிலையை அகற்றி விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு, 21 குழுக்கள் அமைத்து சிறப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
90 தொழிற்சாலைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 28 தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் தங்குமிடங்கள் தொழிற்சாலை வளாகத்திற்குள்ளேயும், அமோனியா பாதிப்பிற்குள்ளாகக் கூடிய வகையில் அருகில் அமைந்துள்ளதால் அவற்றை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் செய்ய ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் பேசினார்.
ஆய்வுக் கூட்டத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலர் கொ. வீர ராகவ ராவ், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் செ. ஆனந்த் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.