சென்னை: வெள்ளை அறிக்கை குறித்து விளக்கம் அளித்த நிதியமைச்சர் மரிய வில்சன், “இது வித்தியாசமான அரசியல். நீங்கள் (எதிர்க்கட்சிகள்) பழைய சிஸ்டத்துக்குள்ளேயே இருக்கிறீர்கள்” என்றார்.
சட்டப்பேரவையில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதில் அருர் தொகுதி அதிமுக எம்எல்ஏ சம்பத்குமார் பேசும்போது, “சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை, ஏன் கூட்டத் தொடருக்கு முன்பாகவே வெளியிட வேண்டும்? சட்டப்பேரவையில் வெளியிட்டிருக்கலாம்” என்றார்.
இதற்கு நிதியமைச்சர் மரிய வில்சன் பதில் அளித்து பேசும்போது, “வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகம் என்ற அடிப்படையில் இந்த அரசு இயங்கி வருகிறது. இதைத் தான், முதல்வராக பதிவியேற்ற அன்றே, முதல்வர் விஜய் தெரிவித்தார். அவரின் உத்தரவை ஏற்று நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
ஊழலற்ற அரசை நடத்துவேன் என தைரியத்துடன் முதல்வர் விஜய் தெரிவித்தார். இதை வேறு யாரும் சொல்லவில்லை. தமிழகத்தின் தற்போதைய நிலை மக்கள் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக தான், சட்டப்பேரவை கூடுவதற்கு முன்பாகவே முதல்வர் வெளியிட சொன்னார. அவரின் உத்தரவின்படியே, இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்கிறோம்.
கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில், அதற்கு முந்தைய 60 ஆண்டுகளில் வாங்கிய கடனை விட அதிமாக கடன் வாங்கப்பட்டுள்ளது. இன்று தமிழக மக்கள் ஒவ்வொருவரின் மீதும் ரூ.1.28 லட்சம் கடன் உள்ளது. இது மிகத் தெளிவாக மக்களிடம் சேர வேண்டும் என்பதற்காகவே வெளியிடப்பட்டுள்ளது.
இதை ஏன் சட்டப்பேரவையில் வெளியிடாமல், அதற்கு முன்பாக வெளியிடுகிறீர்கள் என்று கேட்கிறீர்கள். இது வித்தியாசமான அரசியல். இந்த அரசின் இந்த முன்னெடுப்பை அனைவரும் பாராட்ட வேண்டும். ஆனால் மக்கள் பாராட்டுகின்றனர். நீங்கள் பழைய சிஸ்டத்துக்குள்ளேயே இருக்கிறீர்கள்” என்று பதில் அளித்தார் அமைச்சர் மரிய வில்சன்.