சென்னை: சித்தா பல்கலைக்கழகம் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தராதது ஏமாற்றம் அளிப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் அலுவலகத்தில் நேற்று 405 பகுதி சுகாதார செவிலியர்கள் மற்றும் 117 வட்டார சுகாதார மேற்பார்வையாளர்களுக்கு பதவி உயர்வு ஆணைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த அரசு பொறுப்பேற்ற நாள் முதல் தற்போது வரை 35,702 புதிய பணிநியமன ஆணைகள்,43,375 பேருக்கு வெளிப்படைத் தன்மையுடன் பணியிடமாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுவரை 16,610 பேருக்கு பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் தற்போதைய ஆணைகளையும் சேர்த்து 1 லட்சத்து 12,945 பேர் பயன்பெற்றுள்ளனர்.
சித்தா மருத்துவத்துக்கு பல்கலைக்கழகம் அமைப்பதற்கு 25 ஏக்கர் நிலம் மாதவரம் பால்பண்ணை பகுதியில் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
இதற்காக ரூ.2 கோடியில் அரும்பாக்கத்தில் உள்ள சித்தா மருத்துவமனையில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக அரசு அனுப்பிய சித்தா பல்கலைக் கழகம் தொடர்பான மசோதாவை இருப்பிலேயே வைத்திருந்துவிட்டு தற்போது குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி இருப்பதாக தெரிகிறது.
ஆளுநரின் ஒப்புதல் என்பது இரண்டாவது முறையாக ஏமாற்றம் அளிக்கிறது. தமிழர்களின் பாரம்பரிய சித்தா மருத்துவத்தை ஏன் ஆளுநர் வெறுக்கிறார் என்று தெரியவில்லை. இது உண்மையிலேயே ஒட்டுமொத்த தமிழர்கள் வருத்தப்படுகின்ற மிகப் பெரிய நிகழ்வாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.