சென்னை: சட்டப்பேரவையில் மதிப்புக் கூட்டு வரி திருத்த சட்ட மசோதாவை வணிக வரி, பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் நேற்று அறிமுகம் செய்தார்.
அதில் கூறியிருப்பதாவது: மதுபான நுகர்வு, அதில் இருந்து உருவாகும் கண்ணாடி, பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து அரசு மிகுந்த கவலை கொண்டுள்ளது.
மதுபானக் கொள்கலன்களை முறையாக அப்புறப்படுத்தாததும், போதிய அளவில் மறுசுழற்சி செய்யாததும், வன விலங்குகள் மற்றும் பொது சுகாதாரத்துக்கு ஆபத்தை விளைவிப்பதுடன், சூழலியல் சீரழிவுக்கும் பெரும் காரணமாக அமைகிறது.
மேலும், இத்தகைய பாதிப்புகளைக் குறைக்க மாநில அரசுக்குஉள்ள கடமையை பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகள் வலியுறுத்தியுள்ளன.
இந்த மோசமான சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்புகளைக் குறைக்கவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான நடைமுறையை ஊக்குவிக்கவும் தகுந்த நிதி மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியம் என அரசு கருதுகிறது.
அதன்படி, மதுபான விற்பனை மீது ‘சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் தீர்வை’ எனும் வரியை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் கிடைக்கும் நிதிவருவாய் இதுதொடர்பான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும்.
அதாவது, மதுபானக் கொள்கலன்களை முறையாக மறுசுழற்சி செய்தல், பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துதல் மற்றும் மறுபயன்பாடு ஆகியவற்றை எளிதாக்குதல், மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு, மதுப் பழக்க மீட்புத் திட்டங்கள், மதுப்பழக்க அடிமையால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கான நலத் திட்டங்கள், வாழ்வாதார உதவிகள் வழங்குதல், சூழலியல், காடுகள், வன விலங்குகளைப் பாதுகாத்தல், மீட்டெடுத்தல், சமூக நலன் சார்ந்த நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும்.
மது அருந்துவதால் ஏற்படும் தீய விளைவுகள், மதுபானக் கொள்கலன்களை முறையாக அப்புறப்படுத்தாததால் ஏற்படும் மோசமான சுற்றுச்சூழல் அபாயங் களை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு, கல்விப் பிரச்சாரங்களுக்கும் இந்த நிதி வருவாய் பயன்படுத்தப்படும். இதற்காக, தமிழ் நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்தை திருத்த அரசு முடிவெடுத் துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.