சென்னை: பதிவுத்துறையில் கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.1,950 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
சென்னை, பாரிமுனை, வடக்கு மாவட்டப் பதிவாளர் அலுவலக கூட்டரங்கில், அக்டோபர் மாதத்துக்கான அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்டப் பதிவாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர், தனித்துறை வட்டாட்சியர் உள்ளிட்டோருடைய பணி தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.
இதில் அமைச்சர் பேசியதாவது: பதிவுத்துறையில் கடந்த அக்டோபர் மாதம் ரூ.1,950 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் அக்டோபர் மாத வருவாயைக் காட்டிலும் ரூ.147 கோடி அதிகம். வருகையில்லா ஆவணப்பதிவு மூலம் நவ.3-ம் தேதி வரை 2,46,260 மனைப்பிரிவு, அடுக்குமாடி குடியிருப்புகளின் முதல் விற்பனை ஆவணங்கள், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கான உரிமை ஒப்படைப்பு ஆவணம் மற்றும் ரசீது ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அரசின் வருவாயை எவ்வித கசிவுமின்றி வசூலிக்க முழு கவனம் செலுத்த அனைத்து அலுவலர்களுக்கும் சீரிய முறையில் பணியாற்றி, வருவாய் இலக்கை அடைய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, பதிவுத்துறையில் ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் நீதிமன்ற வழக்குகளைக் கண்காணித்து துரித முறையில் எதிர்வாதுரை தயாரித்து வழக்குகளை தொடரவும், துறையின் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை துரிதமாக செயல்படுத்தும் ஏஐ தொழில்நுட்ப செயலியின் பயன்பாட்டை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
வரி செலுத்துவோரின் குறைதீர்க்க ஆலோசனை குழு
வணிகவரித் துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற இணை ஆணையர்களின் பணித்திறன் ஆய்வுக் கூட்டத்தில் வணிகவரித் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் பேசும்போது, ‘‘வரி செலுத்துபவரின் குறைகளை மாவட்ட அளவிலேயே தீர்க்கும் வகையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் வரி செலுத்துவோர் ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்தக் குழுக்கள் வரி செலுத்துபவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், குறைகள், ஆலோசனைகள் குறித்து விவாதித்து தீர்வு காணும். இந்த குழுக்களை அந்தந்த மாவட்டத்தில் நவ.30-க்குள் அமைத்து, குழுக்களின் முதல் கூட்டத்தை டிச.15-க்குள் நடத்த வேண்டும். இக்குழுக்கள் 2029 நவ.30-ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும்’’ என்றார்.