நாமக்கல்: “ஜெம் வீரமணி எங்களது குடும்ப நண்பர் என மேடை நாகரிகம் கருதி தெரிவித்தேன்” என வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.
மதுரை அரசு மருத்துமவனையில் நடைபெற்ற தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் லி.மதுபாலன் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் சி.எஸ்.திலீப், பொ.சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் பச்சிளம் குழந்தைகளுக்கு 1 கிராம் எடையிலான தங்க மோதிரம் அணிவித்தார்.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பச்சிளங் குழந்தைகளுக்கு அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், ஆட்சியர் மதுபாலன் ஆகியோர் தங்க மோதிரம் அணிவித்தனர். அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரீஷ் அசோக் உள்ளிட்டோர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் இன்றை தினம் 22 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் கடந்த ஜூன் 22-ம் தேதி முதல் இம்மாதம் 26-ம் தேதி வரை பிறந்த 1,527 குழந்தைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் வட்டார வாரியாக தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது” என்றார்.
அப்போது, இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஜெம் வீரமணியின் நிகழ்வில் தவெக அமைச்சர்கள் லோகேஷ் தமிழ்செல்வன், வெங்கட்ரமணன் பங்கேற்று வீரமணியை புகழ்ந்து பேசியது குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்ததாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், “நான் அதனை மேடை நாகரிகம் கருதி தெரிவித்தேன். இது வழக்கம்தான். எடப்பாடி பழனிசாமிக்கும், ஜெம் வீரமணிக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரித்தால் அவர்களது நட்பு குறித்து தெரியும்” என்றார்.
மேலும், “தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெறும்” என்றார்.