தமிழகம்

பட்டாசு உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் அமைச்சர் கீர்த்தனா பேச மறுத்ததால் சலசலப்பு!

அ.கோபால கிருஷ்ணன்

சிவகாசி: சிவகாசியில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள், வியாபாரிகள் உடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் கீர்த்தனா, ஒரு சில காரணங்களால் பேச முடியவில்லை என தெரிவித்ததால் தொழில் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

தவெக சார்பில் போட்டியிட்டு சிவகாசி தொகுதியின் முதல் பெண் எம்.எல்.ஏவான கீர்த்தனாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பிரசாரத்தின் போதே பட்டாசு ஆலை விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுப்பேன் என தொடர்ந்து கூறி வந்தார். தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரான பின், விருதுநகர் வந்த அமைச்சர் கீர்த்தனா, பட்டாசு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் உடன் ஆலோசனை ஆலோசிக்க குழு அமைத்து தீர்வு காணப்படும். சனிக்கிழமை பட்டாசு ஆலை உரிமையாளர்கள் உடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படும் என்றார்.

இந்நிலையில், இன்று பிற்பகலில் சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு மாற்று கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டான்பாமா) அலுவலகத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள், வியாபாரிகள் உடன் அமைச்சர் கீர்த்தனா ஆலோசனை நடத்தினார். பட்டாசு உற்பத்தியாளர்கள் சிலர் தங்களது கருத்துக்களை தெரிவித்த நிலையில், அமைச்சர் கீர்த்தனா எதுவும் பேசாமல் கூட்டத்தை முடித்தார்.

அப்போது உற்பத்தியாளர்கள் சிலர் அமைச்சரை பேசுமாறு கூறினார். அதற்கு அவர் உங்களிடம் மிக விரிவாக பேச வேண்டும் என எனக்கு ஆசை. விட்டிருந்தால் ஒரு மணி நேரம் கூட பேசியிருப்பேன். ஒரு சில காரணத்தினால், காலம் கருதி பின்பு பேசுவோம், என்றார். பட்டாசு உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் உடன் அமைச்சர் தனியாக ஆலோசனை நடத்தினார்.

நேற்று முன்தினம் மதுரை விமான நிலையம், விருதுநகர், சிவகாசி என அடுத்தடுத்து 3 இடங்களில் பட்டாசு தொழில் பிரச்சினையை தீர்ப்பது குறித்து அமைச்சர் பேட்டி அளித்த நிலையில், பட்டாசு உற்பத்தியாளர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பேசாததால் உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

SCROLL FOR NEXT