அமைச்சர் கீர்த்தனா

 
தமிழகம்

“விபத்தில்லா பட்டாசுத் தொழிலுக்கு விரைவில் வல்லுநர் குழு” - அமைச்சர் கீர்த்தனா தகவல்

இ.மணிகண்டன்

விருதுநகர்: “விபத்தில்லாமல் பட்டாசுத் தொழிலை மேற்கொள்ள வல்லுநர் குழு விரைவில் அமைக்கப்படும். கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம்” என்று தமிழக அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.

சிவகாசி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கீர்த்தனா இன்று விருதுநகர் வந்தார். அரசு ஆய்வு மாளிகையில் அவருக்கு மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா பூங்கொடுத்து கொடுத்து வரவேற்றார். எஸ்.பி. ஸ்ரீநாதா மற்றும் அதிகாரிகளும் அமைச்சர் கீர்த்தனாவுக்கு வரவேற்பு அளித்தனர்.

அதையடுத்து, அதிகாரிகளுடன் சற்றுநேரம் அமைச்சர் கீர்த்தனா ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசுத் தொழிலை பாதுகாக்கவும், விபத்து இல்லாமல் இத்தொழிலை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்காக வல்லுநர்கள் கொண்ட குழு விரைவில் அமைக்கப்படும். அதில், அதிகாரிகள், பட்டாசு ஆலை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் என மூன்று தரப்பினரும் கலந்துரையாடி அவர்களே சிறந்த முடிவுகளை எடுப்பார்கள். அவர்களின் குரலாக நாங்கள் இருப்போம். இதுவரை இதுவரை இப்படிக் குழுக் கூட்டம் நடத்தப்படவில்லை. வரலாற்றில் இதுவே முதல் முறை. பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் ஒரு கலந்தாய்வு கூட்டம் நடத்த உள்ளோம்.

அமைச்சர்களுக்கான துறைகள் இரு நாள்களில் அறிவிக்கப்படும். மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளது. மாதம் ரூ.2,500 வழங்குவோம் என்று வாக்குறுதி கொடுத்துள்ளோம். கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம்.

எப்படிப்பட்ட நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார் என்பது டாஸ்மாக் விஷயத்திலேயே உங்களுக்குத் தெரிந்திருக்கும். நாங்கள் புதிய ஆட்சி அமைத்துள்ளோம்.

கடந்த ஆட்சியில் இதுவரை ரூ.10.50 லட்சம் கோடி கடன் வாங்கி வைத்துள்ளார்கள். என்ன நடந்துள்ளது என்று முதலில் எங்களுக்குத் தெரியவேண்டும். உரிய கால அவகாசம் கொடுத்தால் அனைத்தையும் செய்வோம்” என்று அமைச்சர் கீர்த்தனா கூறினார்.

மேலும், கூட்டணிக் கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு கொடுக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, “இதற்கு தலைவர் பதில் கொடுப்பார். அவர் என்ன கூறினாலும் மக்கள் நலனுக்காகத்தான் இருக்கும். சற்று பொறுத்திருந்து பார்ப்போம்” என்று பதில் அளித்தார்.

SCROLL FOR NEXT