விருதுநகர்: பள்ளிக்கு வரும்போது மாணவர்கள் சரியாக முடிவெட்டிக் கொண்டு வரவில்லை என்றால் மொட்டை அடியுங்கள் என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறினார்.
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகே அயன்ரெட்டியபட்டியில் அரசுப் பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டுவிழா நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசியதாவது: நம் வீட்டுப் பெண் பிள்ளைகளையும், ஆண் பிள்ளைகளையும் நல்லமுறையில் வளர்க்க வேண்டியது பெற்றோரின் முதற்கடமை. குழந்தைகளுக்கு குட் டச், பேடு டச் பற்றி சிறு வயதிலேயே தாயாகிய நீங்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
இன்றைய பள்ளி மாணவர்கள் நாகரிகம் என்ற பெயரில் தலைமுடியை வித்தியாசமாக வெட்டுவது மற்றும் முறையற்ற ஆடைகளை அணிவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
பள்ளிக்கு வரும்போது மாணவர்கள் சரியாக முடிவெட்டிக் கொண்டு வரவில்லை என்றால் மொட்டை அடித்து விடுங்கள் அதில் தவறில்லை. முதல் தவறே அங்கிருந்துதான் துவங்கும். இதை உங்கள் வீட்டுப் பிள்ளையாகத்தான் சொல்கிறேன்.
அதேபோல் முழங்கால் வரை பேண்டை தூக்கி மடித்து விட்டு அதை ஃபேஷன் என்று சொல்கிறார்கள். இது எல்லாம் தவறு. இது காவல்துறையின் விசாரணையின்போது தவறான தோற்றத்தை ஏற்படுத்தக் கூடும். கடந்த காலங்களில் கல்வியில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தைப் பெற்று வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாகச் சற்று பின்தங்கியுள்ளது.
நடப்பாண்டில் நமது மாவட்டம் மீண்டும் கல்வியில் முதலிடத்தைப் பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கல்வித்துறை அதிகாரிகளுடன் இணைந்து முழுவீச்சில் செயல்படுவோம். தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படுகின்றன என்றார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் வன்னிஅரசு , மாவட்ட ஆட்சியர் ஷரண்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.