தமிழகம்

மின்கட்டண உயர்வு குறித்து முதல்வர் முடிவு செய்வார்: அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: மின் கட்​ட​ணம் உயர்வு குறித்து முதல்வர் முடிவு செய்​வார் என்​றும் பொது​மக்​களுக்கு பாதிப்​பில்​லாத வகை​யில் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்​றும் மின்​துறை அமைச்​சர் சி.டி.ஆர்​.நிர்​மல் குமார் தெரி​வித்​துள்​ளார்.

கடந்த 2017-ம் ஆண்​டில் மத்​திய அரசின் உதய் மின் திட்​டத்​தில் தமிழக அரசு கையெழுத்​திட்​டது. இந்த திட்​டத்​தின்​படி 2027 வரை ஆண்​டு​தோறும் ஜூலை மாதம் மின் கட்​ட​ணம் உயர்த்​தப்பட வேண்​டும்.

மின் கட்​ட​ணத்தை உயர்த்​தி​னால் தான் உதய் மின் திட்​டத்​தில் கடனுதவி​கள் கிடைக்​கும். இதன் காரண​மாக 2026-27-ம் ஆண்​டு​வரை ஆண்​டு​தோறும் ஜூலை 1-ம் தேதி மின் கட்​ட​ணத்தை உயர்த்த தமிழ்​நாடு மின்​சார ஒழுங்​கு​முறை ஆணை​யம் அனு​மதி வழங்​கியது.

அதன்​படி 6 சதவீதம் அல்​லது ஏப்​ரல் மாத பணவீக்க விகிதம் ஆகிய இரண்​டில் எது குறைவானதோ, அந்த அளவுக்கு கட்ட​ணம் உயர்த்​தப்பட வேண்​டும்.

அதன்​படி ஆண்​டு​தோறும் ஜூலை 1-ம் தேதி மின் கட்​ட​ணம் உயர்த்​தப்​படுகிறது இருப்​பினும் கடந்த திமுக அரசு, ஒரு சில ஆண்​டு​களில் வீட்டு மின் இணைப்​பு​களுக்​கான கட்டண உயர்வை அரசே ஏற்​கும் என அறி​வித்​தது.

இந்​நிலை​யில் இந்த ஆண்டு 3.86 சதவீதம் மின் கட்​ட​ணம் உயர்த்​தப்​படலாம் எனக் கூறப்​படும் நிலை​யில் கட்​ட​ணம் உயர்வு குறித்து முதல்​வர் முடி​வெடுப்​பார் என மின்​துறை அமைச்​சர் நிர்​மல் குமார் தெரி​வித்​துள்​ளார்.

சென்​னை​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: கடந்த ஆட்​சி​யில் 2022-ம் ஆண்​டில் மின் கட்​ட​ணம் நிர்​ண​யம் செய்​வ​தில் திருத்​தம் மேற்​கொண்​டனர். இதன்​படி ஒவ்​வோர் ஆண்​டும் தமிழ்​நாடு மின்​சார ஒழுங்​கு​முறை ஆணை​யமே கட்​ட​ணம் உயர்த்​தும் முறையை நடை​முறைப்​படுத்​தி​யுள்​ளனர்.

ஒவ்​வோர் ஆண்​டும் எவ்​வளவு உயர்த்த வேண்​டும் என ஏற்​கெனவே ஒழுங்​கு​முறை ஆணை​யத்​தின் உத்​தர​வு​களில் உள்​ளது. தற்​போது முதல்​வர், நிதித்​துறை செயலரிடம் ஆலோ​சித்து பின், முதல்​வரின் ஒப்​புதலுக்​குப் பிறகு, பொது​மக்​களுக்கு பாதிப்​பில்​லாத வகை​யில் நடவடிக்கை எடுக்​கப்​படும்.

வெளிப்படைத்தன்மை

சிறைத் துறை​யில் தேவை​யில்​லாத பணி​யிட​மாற்​றங்​கள் நடப்​ப​தாக புகார்​கள் வந்​துள்​ளன. அதை நிறுத்​து​மாறு கூறி​யுள்​ளோம். சிறைத் துறை, மின் துறை என எந்​தத் துறை​யிலும் வெளிப்​படைத்​தன்​மை​யுடன் பணி​யிட​மாற்​றங்​களைச் செய்ய நடவடிக்கை எடுத்​துள்​ளோம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT