அமைச்சர் அருண்ராஜ்
சென்னை: சித்தா பல்கலைக்கழகம் அமைப்பது மற்றும் துணைவேந்தர் நியமன விவகாரங்களில் விரைவில் தீர்வு காணப்படும் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட இந்திய மருத்துவ நலவாழ்வு சிகிச்சை மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் நேற்று திறந்து வைத்தார்.
அப்போது, அவர் கூறியதாவது: இந்திய மருத்துவ நலவாழ்வு மையத்தில் பொதுமக்களுக்கு உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், வகை-2 நீரிழிவு நோய், மூட்டு தேய்மானம், கழுத்து, இடுப்பு, முதுகெலும்பு பாதிப்புகள், மன அழுத்தம் சார்ந்த பிரச்சினைகள் உள்ளிட்ட வாழ்க்கைமுறை சார்ந்த நோய்களுக்கு நலவாழ்வு மற்றும் மீட்டெடுப்பு என 16 வகையான சிகிச்சைகள் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும்.
மையத்தின் முக்கிய சேவைகளாக நச்சு நீக்க சிகிச்சை, நோய்த்தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பராமரிப்பு, புத்துணர்வு சிகிச்சை, நலவாழ்வை மேம்படுத்தும் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
செங்கல்பட்டில் உள்ள சர்வதேச யோகா - இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில், 10 முதல் 15 நாட்கள் வரை தங்கிஇயற்கை மருத்துவ முறையில் சிகிச்சை பெறும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு உணவு போன்ற வசதிகளும் ஏற்படுத்தி தரப்படுகிறது.
சித்த மருத்துவமனைகளில் மருத்துவர்கள், பணியாளர்கள் பற்றாக்குறையை சரிசெய்ய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும். சித்தா பல்கலைக்கழகம் அமைப்பது மற்றும் துணைவேந்தர் நியமனம் தொடர்பான சட்ட விவகாரங்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இதற்கு விரைவில் தீர்வுகாணப்படும் என்று தெரிவித்தார்.