சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருந்தாலும், பொதுமக்கள் சுற்றுப்புற பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சர் அருண்ராஜ் கேட்டுக்கொண்டார்.
சென்னை சோழிங்கநல்லூர் அரசு புறநகர் மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
மருத்துவப் பணியாளர்களின் வருகைப் பதிவை ஆய்வு செய்த அமைச்சர், இதனை பயோமெட்ரிக் முறைக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
மருத்துவமனையில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கை, மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்களின் எண்ணிக்கை, அவர்களின் பணி விவரம் குறித்தும் மருத்துவ அலுவலர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.
மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் ஏ.அரவிந்த், மருத்துவமனையின் கூடுதல் நிலைய அலுவலர் கிறிஸ்டி ஜெயமுருகன், சோழிங்கநல்லூர் எம்எல்ஏ இசிஆர் பி.சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் அருண்ராஜ் கூறியதாவது: இந்த மருத்துவமனை 262 படுக்கை வசதியுடன் உள்ளது. இப்பகுதியில் உள்ள கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக திருவல்லிக்கேணி கஸ்தூரிபா அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே இந்த மருத்துவமனை 24 மணிநேரமும் மகப்பேறு சிகிச்சை வழங்கும் வகையில் சீமாங் மையமாக தரம் உயர்த்தப்படும். மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்கள், 83 பயிற்சி மருத்துவர்கள் உள்ளனர். விரைவில் இவர்களுக்கான பணிகள் முறைப்படுத்தப்பட்டு, மருத்துவமனை 24 மணிநேரமும் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதில் பொதுமக்களின் பங்களிப்பு முக்கியமானது. மழைநீர் தேங்கும் இடங்களில் கொசுப் புழுக்கள் உற்பத்தியாகும்.
எனவே பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொசு ஒழிப்பு பணியாளர்கள் தினமும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.