அமைச்சர் அருண்ராஜ்

 
தமிழகம்

தமிழகத்தில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை இடங்கள் பறிபோகும் சூழல் உருவானது ஏன்? - அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

தமிழினி

சென்னை: “மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலேயே 4 மருத்துவ கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்தை பெற்றுள்ளன. அந்த கல்லூரிகள் எந்த கட்சியைச் சேர்ந்தவை என அனைவருக்கும் தெரியும். சமூக நீதியை பேசும் திமுக, அதிமுக கட்சிகள் இதற்கு பதில் சொல்ல வேண்டும்” என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 6 தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களாக மாற்றப்படுவதால் அரசு ஒதுக்கீட்டுக்கு கிடைக்க வேண்டிய எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை இடங்கள் பறிபோகும் நிலை உருவாகியுள்ளது என சர்ச்சை கிளம்பியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாட்டில் 4 தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்த அனுமதி கோரி தனியார் மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாடு அரசை அணுகின. தாமதமாக என்ஓசியை மறுத்த காரணத்தினால் தனியார் மருத்துவக் கல்லூரிகள் உயர் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றன.

பெரம்பலூரைச் சேர்ந்த 2 தனியார் மருத்துவக் கல்லூரிகள் தமிழக அரசை அணுகாமலேயே நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் ஆகியுள்ளன. நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் இட ஒதுக்கீட்டை பின்பற்றாமல் மாணவர் சேர்க்கை நடத்த முடியும்.

தனியார் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றால், இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடும் பின்பற்றப்படாது. இது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறோம்.

இது குறித்து மத்திய அரசிடமும் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். இதற்கு நிரந்தர தீர்வு கல்வி, மருத்துவத்தை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவதே.

அந்த கல்லூரிகள் எந்த கட்சியைச் சார்ந்தவை என்பது எல்லோருக்கும் தெரியும். சமூக நீதி பேசும் திமுக, அதிமுக பதில் சொல்ல வேண்டும்.

கடந்த திமுக ஆட்சியில் தனியார் கல்லூரிகளுக்கு விதிகளை மீறி தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தற்போது நாம், 461 இடங்களை ஒதுக்கும் நிலை உருவாகியுள்ளது.

இதுபோல மாநில அரசு அனுமதியின்றி அந்தஸ்து கிடைத்தால் தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். இது குறித்து மத்திய அரசிடமும் தமிழக அரசு சார்பில் முறையீடு செய்ய உள்ளோம். ” என்றார்.

‘நலம் ஏ.ஐ’ செயலி அறிமுகம்

அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ் அப் மூலம் ஓபி சீட்டு பெறும் சேவை முதற்கட்ட ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. ‘நலம் ஏ.ஐ’ என்ற பெயரில் வாட்ஸ் அப் சேட்பாட் சேவையை அமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார்/

வாட்ஸ்அப் மூலம் அரசு மருத்துவமனைகளுக்கான ஓபி சீட்டு பெறலாம். அதாவது, வாட்ஸ் அப்பில் 96192 22999 என்ற எண்ணிற்கு ‘ஹாய்’ என மெசேஜ் அனுப்பி ‘நலம் ஏ.ஐ’ சேவையை பெற முடியும். தற்போது, முதற்கட்டமாக 22 மாவட்டங்களில் 'நலம் ஏ.ஐ' சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

செல்போன் இல்லாதவர்கள் நேரடியாக வந்து வழக்கம் போல முன்பதிவு சீட்டுகளை பெறலாம். இ-சேவை மையங்கள் மூலமாகவும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு முன்பதிவு செய்ய முடியும்.

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நெஞ்சகப் பிரிவு மருத்துவரை அணுகவும் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவரின் மருந்துசீட்டு, ஆய்வக அறிக்கையை இணைய வழியிலேயே பெற்றுக்கொள்ளலாம்.

SCROLL FOR NEXT