சென்னை: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அவசர சிகிச்சை மையம், பொது வார்டு போன்றவற்றை ஆய்வு செய்தபின், மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர், அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசு மருத்துவமனைகளில் சுகாதாரம் இருக்காது. காத்திருப்பு அறை இருக்காது. கழிப்பறை சுகாதாரமாக இருக்காது என்ற மனநிலை மக்களிடம் உள்ளது. மற்ற மாநிலங்களை விட, இங்கு மருத்துவ கட்டமைப்பு மேம்பட்டுள்ளது.
ஆனாலும், அவற்றை இன்னும் மேம்படுத்த முடியும். அதை நாங்கள் நிச்சயம் முயற்சித்து மேம்படுத்துவோம். தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் என்று சொன்றால் ரூ.1,000 செலவாகிறது.
அரசு மருத்துவமனைகளில் தரமாகவும், இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு தரமான மருத்துவர்கள் உள்ளனர். தேவைப்படும் பரிசோதனை மட்டுமே எடுக்கப்படுகிறது.
தேவையான மருந்துகளை மட்டுமே கொடுக்கின்றனர். அந்த நம்பிக்கையை மக்களிடையே கொண்டு வருவோம். மருத்துவர்கள், செவிலியர்களுக்கு வெளிப்படை தன்மையாகவும், நேர்மையாகவம் பணியிட மாறுதல் விரைவில் நடைபெறும்.
யாரை நம்பியும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஏமாறவேண்டாம். பிரேதப் பரிசோதனை கூடத்தில் உடல்கள் தேக்கம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக பட்ஜெட்டில், சுகாதாரத் துறைக்கு அதிக தொகை கேட்டுள்ளோம். கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
அரசு மருத்துவமனைகளில் உள்ள கழிப்பறை சுகாதாரமற்ற முறையில் உள்ளது. அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் எங்கள் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றால், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோம். நாங்கள் நம்பவில்லை என்றால், வேறு யாரு நம்புவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.