சென்னை: சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, கிங் நிலைய வளாகத்தில் கட்டப்பட்டு வரும் புதிய குழந்தைகள் உயர் சிறப்பு மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளைச் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் நேற்று ஆய்வு செய்தார்.
முதலில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்குச் சென்று நோயாளிகள் பதிவு செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “நலம் ஏஐ” செயலியின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.
மருத்துவமனையில் உள்ள கழிவறை வசதிகளை பார்வையிட்டு அவற்றைத் தூய்மையாகப் பராமரிக்க உத்தரவிட்டார். மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று, கூடுதல் கழிவறைகள் கட்ட பொதுப்பணித்துறை மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
மேலும், ஆய்வின் போது முல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை கோரிய பயனாளி ஒருவருக்கு, உடனடியாக அட்டை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கிண்டி கிங் நிலைய வளாகத்தில் 4,63,544 சதுர அடி பரப்பளவில் ரூ.338.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை, ஆராய்ச்சி நிலைய கட்டுமானப் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.
அப்போது, ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், தரக்கட்டுப்பாடுகளைப் பின்பற்றி பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், ஆயுஷ் மருத்துவர்கள் அலோபதி மருந்துகளைப் பரிந்துரைப்பதாக எழுந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும், நிலுவையில் உள்ள மகப்பேறு நிதியுதவிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.