சென்னை: சட்டப்பேரவையில் நேற்று எரிசக்தி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு அமைச்சர் நிர்மல் குமார் பதில் அளித்தார்.
அப்போது, புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அவர் பேசியதாவது: தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தால், 2026-27-ம் ஆண்டில் 50 ஆயிரம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்.
சென்னை பகுதியில் உள்ள 20 துணை மின் நிலையங்களுக்கு (33/11 கி.வோ. திறன்) கூடுதல் 33 கி.வோ. மின்னூட்டி ரூ.104 கோடியில் அமைக்கப்படும். மின் தொடரமைப்புக் கழகத்தில் உள்ள 10 மிக உயர் அழுத்ததுணை மின் நிலையங்களில், தற்போது உள்ள மின்மாற்றிகளின் திறன் ரூ.110.76 கோடி யில் உயர்த்தப்படும்.
10 ஆயிரம் பணியாளர்கள் தேர்வு
மின் பகிர்மானக் கழகத்தில் ஆள்பற்றாக்குறையைப் போக்க 2,558 காலி இடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும். ஆரம்ப நிலைப் பணிகளை உடனே மேற்கொள்ள 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்த முறையில் 10 ஆயிரம் பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில் 1,250 இடங்களில் உள்ள பகிர்மான மின்மாற்றி கட்டமைப்புகள் ரூ.250 கோடியில் வளையச் சுற்றுத்தர அமைப்புகளாக மாற்றப்படும். இதன்மூலம் இடையூறு, பழுது ஏற்படும்போது மாற்று மின் விநியோக ஏற்பாடுகளை செய்து, தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்.
மிக உயர் அழுத்த துணை மின் நிலையங்களுக்கான தகவல் தொடர்பு சாதனங்கள் ரூ.120.32 கோடியில் கொள்முதல் செய்யப்படும். ஆயுள்காலம் முடிந்த, பழைய பாதுகாப்பு, தகவல் தொடர்பு சாதனங்கள் ரூ.92.3 கோடியில் மாற்றி அமைக்கப்படும்.
மேலும், 110 கி.வோ. துணை மின் நிலையங்களில் உள்ள 100 உள்ளீடு தனிமைப்படுத்தி திறப்பான்களுக்கு பதிலாக ரூ.130 கோடியில் பிரேக்கர்கள் மாற்றப்படும். மிக உயர் அழுத்த புதைவடப் பழுதுகளைக் கண்டறிய, அதற்கான கருவி பொருத்திய சிறப்பு வாகனம் ரூ.17 கோடியில் கொள்முதல் செய்யப்படும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் கட்டமைப்புடன் இணைப்பு மற்றும் திறந்த அணுகல், மின்கல ஆற்றல் சேமிப்பு திட்டங்களுக்கு இணைய வழி விண்ணப்ப தளம் உருவாக்கப்படும். நுகர்வோரின் புகார்களுக்கு தானாகவே பதில் அளிக்கும் மென்பொருள் வசதியை உருவாக்கி நுகர்வோர் புகார் மேலாண்மை அமைப்புடன் ஒருங்கிணைக்கப்படும்.
கள ஆய்வில்லா இணைப்புகள்
மின் கட்டணத்தை பாதுகாப்பாக, வசதியாக, உரிய காலத்துக்குள் செலுத்த தாழ்வு அழுத்த மின்கட்டணத் தொகை, மின் கட்டண தேதியில் இருந்து 10-வது நாளில், பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து தானாகவே பிடித்தம் செய்யும் வகையில் ‘இ-மேண்டேட்’ பதிவு மூலம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்படும்.
புதிய அழுத்தப்பட்ட உயிரி வாயு கொள்கை வகுக்கப்படும். வீடுகளுக்கு புதிய ஒருமுனை மின் இணைப்பு கோரும் விண்ணப்பதாரர்களுக்கு, கள ஆய்வு இல்லாமலேயே சுய உறுதிமொழி அடிப்படையில் புதிய மின் இணைப்பு வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 17 அறிவிப்புகளை வெளியிட்டார்.