திருச்செந்தூர் அருகே உள்ள கல்விளை கிராமத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் திமுகவினரிடம் ஏன் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கேள்வி கேட்டு பெண்கள் வாக்குவாதம் செய்தனர்.
தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே கல்விளை கிராமத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம், வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டி பொதுமக்கள் கேள்வி கேட்டு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவர் திரும்பிச் சென்றார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் 7-வது முறையாக போட்டியிடுகிறார். இதற்காக கடந்த 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்த இவர், பிரச்சாரத்தை தொடங்கி ஒவ்வொரு ஊராகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
இதன் ஒருபகுதியாக உடன்குடி மேற்கு ஒன்றியம் செம்மறிகுளம் ஊராட்சி பகுதிகளான ராமசுப்பிரமணியபுரம், வலசைகிணறு, கல்விளை, பூலிகுடியிருப்பு, அணைத்தலை ஆகிய கிராமங்களுக்கு நேற்று காலை வாக்குசேகரிக்க, அனிதா ராதாகிருஷ்ணன் தனது ஆதரவாளர்களுடன் ஜீப்பில் சென்றார்.
ஒவ்வொரு கிரமாமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், பின்னர் கல்விளை கிராமத்துக்கு சென்றார். அப்போது, அங்கு திரண்டிருந்து பெண்கள் மற்றும் பொதுமக்கள் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறும்போது, “இதற்கு முன்பு தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த அடிப்படை வசதிகளை எங்கள் கிராமத்தில் நிறைவேற்றித் தரவில்லை.
கிராமத்தில் கோயில் கட்டுவதற்கு உதவியும் கேட்டோம். அதற்கும் உதவி செய்யவில்லை. இப்போது மட்டும் எதற்காக வாக்கு கேட்டு எங்கள் கிராமத்துக்கு வந்தீர்கள் என்று அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் கேள்வி கேட்டு வாக்குவாதம் செய்தனர்.
அவர்களை சமாதானம் செய்ய முயன்ற நிலையில், வாக்குவாதம் தொடர்ந்ததால், அனிதா ராதாகிருஷ்ணன் வந்த வாகனம் அங்கிருந்து வேகமாக வெளியேறியது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.