பொது நூலக இயக்ககம் சார்பில் நூலகர்களுக்கான டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ், துறை செயலர் பி.சந்திரமோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை: ‘தமிழகத்தில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களின் செயல்முறை விளக்கத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்க வேண்டும்’ என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். பொது நூலகத் துறை சார்பில் சிறப்பாக செயல்பட்ட நூலகங்கள், நூலகர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், 40 நூலகர்களுக்கு டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது (நல்நூலகர் விருது), 25 நூலகர்களுக்கு நூலக ஆர்வலர் விருது (வாசகர் வட்டம்) ஆகியவற்றை வழங்கினார். மேலும், உறுப்பினர், புரவலர் மற்றும் நன்கொடை அதிகமாக சேர்க்கப்பட்ட 12 நூலகங்களுக்கும் அவர் கேடயங்களை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து, மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகள் வழங்குவதற்காக சாம்சங் நிறுவனத்துடன், தமிழக பள்ளிக்கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன்மூலம் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 3,000 மாணவர்கள் பயனடைவார்கள்.
இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன், இயக்குநர் ச.கண்ணப்பன், பொது நூலகத் துறை இயக்குநர் ச.ஜெயந்தி, இணை இயக்குநர் ச.இளங்கோ சந்திரகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: மாநில கல்விக் கொள்கை அடிப்படையில் புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்தும் விதமாக உயர்மட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆலோசனைக் கூட்டம் 24-ம் தேதி நடைபெற உள்ளது.
வரும் கல்வியாண்டுகளில் புதிய பாடத்திட்டத்தை கொண்டுவர முயற்சித்து வருகிறோம். தமிழகம் எந்தெந்த துறைகளில் முதன்மையானதாக இருக்கிறதோ, அதையெல்லாம் ஆளுநர் விமர்சனம் செய்கிறார்.
ஆராய்ச்சிப் படிப்புகளில் தரம் இல்லை என ஆளுநர் சொல்வதை ஏற்க முடியாது. எங்கே தவறு உள்ளது என்பதை சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்ள தயாராக உள்ளோம். தரத்தை தெரிந்துகொள்ளலாம் தமிழகத்தில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களின் செயல்முறை விளக்க நிகழ்ச்சியில் ஆளுநர் பங்கேற்று கேள்விகள் கேட்க வேண்டும்.
அப்போது மாணவர்கள் சொல்லும் பதிலில் இருந்து நமது கல்வியின் தரத்தை ஆளுநர் தெரிந்துகொள்வார். ராமேசுவரம் அருகே மாணவி கொலையான விவகாரத்தில் சம்பவம் பள்ளி வளாகத்துக்கு வெளியே நடந்துள்ளது. ஆனாலும், அதுகுறித்து விசாரிக்கப்படும். அதேபோல், பள்ளி வளாகத்துக்குள்ளும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.