திருச்சி: அரசு ஊழியர்களுக்கு வரும் ஜன. 6-ம் தேதிக்குள் முதல்வர் நல்ல செய்தியை தெரிவிப்பார் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மாணவர்களின் புத்துணர்ச்சிக்காகத்தான் பள்ளிக்கு விடுமுறை விடப்படுகிறது. எனவே, விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது.
தனியார் பள்ளிகள் இதை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம்.
மத்திய அரசு கல்வியில் 20 நோக்கங்களை அடைய வேண்டும் என்று கூறுகிறது. அதில் நாம் 19-ஐ அடைந்து விட்டோம். கேரளா இருபதையும் அடைந்துவிட்டது. ஆனால், இந்த இரு மாநிலங்களுக்குத்தான் கல்வி நிதியை ஒதுக்காமல் வஞ்சித்து வருகிறார்கள்.
கல்வியிலும் அரசியல் செய்வது வேதனையாக உள்ளது. ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஜன. 6-ம் தேதி முதல் கால வரையற்ற போராட்டம் நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் அவர்கள் போராட்டம் நடத்துவதில் உறுதியாக உள்ளனர். ஜன. 6-ம் தேதிக்குள் அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தியை நிச்சயமாக முதல்வர் தெரிவிப்பார். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தெரிவித்தார்.