சென்னை கிண்டி, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில், தொழில் முனைவோர் சான்றிதழ் படிப்பவர்களுக்கான தங்கும் விடுதியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று திறந்து வைத்தார்.
சென்னை: ‘தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 50.19 லட்சம் பேருக்கு தொழில்முனைவு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது’ என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
சென்னை தொழில்முனை வோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தொழில் முனைவோர் சான்றிதழ் படிப்பில் சேருவோர் தங்கி பயில, ரூ.2.34 கோடியில் கட்டப்பட்ட தங்கும் விடுதியைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள்துறை தா.மோ.அன்பரசன் நேற்று திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது: 120 பேர் தங்கும் விடுதி தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் நடத்தும் சான்றிதழ் படிப்பில் 120 பேர் தங்கி பயிலும் வகையில் தங்கும் விடுதி திறக்கப்பட்டுள்ளது.
புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் புத்தாக்க பற்றுச்சீட்டு திட்டத்தின்கீழ் 20 புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு ரூ.35.63 லட்சம் நிதி உதவி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற்று தொழில் முனைவோர்களாக சாதனை படைத்துள்ள 5 பெண் தொழில் முனைவோர்களுக்கு விருதுகளும் வழங்கப்படுகிறது.
திமுக அரசு பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில் 50.19 லட்சம் பேருக்கு தொழில் முனைவு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு உதவித்தொகை திட்டத்தில், 572 பேருக்கு ரூ.14.50 கோடி வழங்கப்பட்டுள்ளது. பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின்கீழ், 140 சிறந்த மாணவ குழுக்களுக்கு, ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 39 தொழில் வளர் காப்பகங்களுக்கு, ரூ.21 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த காப்பகங்கள் மூலம் 961 இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை தயாரித்து தொழில்முனைவோர் களாக உருவாகி உள்ளனர்.
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க சான்றிதழ் படிப்பில் இதுவரை 23 பேர் சான்றிதழ் படிப்பு முடித்து புதிய தொழில்களைத் தொடங்கியுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இவ்விழாவில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை செயலர் அதுல் ஆனந்த், சிட்கோ மேலாண் இயக்குநர் கார்த்திக், தொழில் வணிக ஆணையர் நிர்மல் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.