சென்னை: “இனிமேல் நீங்கள் கனவில் கூட ஆட்சிக்கு வர முடியாது என்பதை உறுதியாகச் சொல்கிறோம்” என்று பேரவையில் திமுக உறுப்பினர்களை நோக்கி அமைச்சர் என்.ஆனந்த் கூறினார்.
சட்டப்பேரவையில் நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் சுற்றுலா துறைகளின் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது வேளாண் துறை அமைச்சர் வினோத், “கடந்த திமுக ஆட்சியில் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகளில் அங்காங்கே உடைந்து தொங்குகின்றன. கம்பிகள் வெளியே தெரிகின்றன. வீடு மறுசீரமைப்புக்கு ரூ.50 ஆயிரம் எனச் சொல்லி, சிமென்ட்டை பூசிவிட்டு, சுண்ணாம்பு அடித்துள்ளனர்” என்றார்.
அதற்கு திமுக உறுப்பினர் கே.என்.நேரு, “கடந்த காலங்களில் கட்டப்பட்ட வீடுகள் எல்லாம் பழுதடைந்துள்ளதாக அமைச்சர் சொல்கிறார். 1986-ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திராகாந்தி காலத்தில் ரூ.13 ஆயிரத்தில் தொடங்கிய வீடுகள் கட்டும் திட்டம் ரூ.3 லட்சத்துக்கு வந்துள்ளது. அந்த வீடுகளை நேரடியாக அரசோ, ஒப்பந்ததாரரோ கட்டுவது இல்லை. பயனாளிகளே கட்டுவது. அமைச்சர்கள், அதிகாரிகள் சென்று மேற்பார்வை மட்டும் செய்வார்கள்.
சிலர் கூடுதலாக பணம் போட்டும், சிலர் இருப்பதை வைத்தும் கட்டுகிறார்கள். அதனால்தான் வீடுகளைப் பழுதுபார்க்க தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நீங்கள் 70 ஆயிரம் வீடுகளை தலா ரூ.5 லட்சத்தில் கட்டுவதாகச் சொல்கிறீர்கள். நீங்கள் கட்டும் வீடுகள் சரியில்லை என்று நாங்கள் பார்த்து சொல்லாத அளவுக்கு நீங்கள் நல்ல முறையில் வீடுகளைக் கட்ட வேண்டும்” என்றார்.
அப்போது அமைச்சர் வினோத், “நமது முதல்வர் ஆட்சியில் கட்டி கொடுக்கும் வீடுகள் தரம் உள்ளதாக இருக்கும்” என்றார். நீர்வளத் துறை அமைச்சர் என்.ஆனந்த், “நாங்கள் எது செய்தாலும் சரியாகத்தான் செய்வோம். தரமாகத்தான் வீடுகளைக் கட்டுவோம். அதற்குதான் ரூ.5 லட்சம் ஆகும். திமுக உறுப்பினர்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். இனிமேல் நீங்கள் கனவில்கூட ஆட்சிக்கு வர முடியாது என்பதை உறுதியாகச் சொல்கிறோம். நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல; மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளோம். நாங்கள் தவறு எதுவும் செய்ய மாட்டோம்” என்றார்.
அப்போது திமுக உறுப்பினர் கோவி.செழியன், “நாங்கள் அரசியல்வாதி அல்ல என்று அமைச்சர் சொல்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் இயக்கம், அரசியல் கட்சியாகத்தான் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, தேர்தல் களத்தில் நின்று, வெற்றி பெற்று, நீங்கள் ஆட்சிக்கு வந்துள்ளீர்கள்” என்றார்.