அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்
சென்னை: ஜிஎஸ்டி வசூல் விவரங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தின் மொத்த பொருளாதார வளர்ச்சியை மதிப்பிடுவது சரியான அணுகுமுறை அல்ல என்று அமைச்சர் டி.லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: மொத்த ஜிஎஸ்டி வசூலில் மாநில ஜிஎஸ்டி (எஸ்ஜிஎஸ்டி), மத்திய ஜிஎஸ்டி (சிஜிஎஸ்டி), ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி) ஆகியவை அடங்கும்.
இதில் வசூலிக்கப்படும் ஐஜிஎஸ்டி முழுவதும் தமிழகத்துக்குச் சொந்தமான வருவாய் அல்ல. பிற மாநிலங்களுக்கான வருவாயும் அதில் அடங்கும். தமிழகத்தின் உண்மையான ஜிஎஸ்டி வருவாயைக் கணக்கிடும்போது, மாநிலத்தில் வசூலிக்கப்படும் எஸ்ஜிஎஸ்டியுடன் தமிழகத்துக்கு பகிர்ந்து அளிக்கப்படும் ஐஜிஎஸ்டி தொகையையும் சேர்த்துக் கணக்கிட வேண்டும்.
இதுதவிர 2025 செப்டம்பரில் மேற்கொள்ளப்பட்ட ஜிஎஸ்டி வரி விகிதச் சீரமைப்பால் பல்வேறு பொருட்களின் வரி விகிதங்களும் குறைக்கப்பட்டுள்ளன. எனவே, மொத்த ஜிஎஸ்டி வசூலில் ஏற்படும் சரிவை மட்டும் வைத்து மாநிலத்தின் பொருளாதார நிலையை மதிப்பிட முடியாது.
தமிழகத்தின் உண்மையான ஜிஎஸ்டி வருவாய் நடப்பு நிதியாண்டில் அக்டோபர் மாதம் வரை 15 சதவீத வளர்ச்சியையும், அக்டோபர் மாதத்தில் மட்டும் 8 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாகப் பின்னடைவைச் சந்தித்த தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும் பணிகளையே முதல்வர் விஜய் மேற்கொண்டுள்ளார்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தவெக ஆட்சியில் ஜிஎஸ்டி வருவாய் சரிந்துவிட்டதாக திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டியிருந்த நிலையில், அமைச்சர் லோகேஷ் தற்போது விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.