அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

 
தமிழகம்

“இரட்டை இலையும், விசிலும் ஒன்றுதான்” - மதுராந்தகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பிரச்சாரம்

கோ.கார்த்திக்

மதுராந்தகம்: “இரட்டை இலையும், விசிலும் ஒன்றுதான். அதனால் தவெக வேட்பாளருக்கு வாக்களியுங்கள்” என்று மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், வையவூர் கிராமப் பகுதியில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசும்போது, “தவெகவைச் சேர்ந்த வேட்பாளர்கள் பணம் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடமாட்டார்கள். மேலும், பணம் வழங்கி வாக்கு சேகரிக்க வேண்டிய அவசியம் தவெக வேட்பாளர்களுக்கு இல்லை.

நாங்கள் பணம் வழங்காமல் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளோம். எங்கள் மீது வீண் பழி சுமத்த வேண்டாம். இட்டை இலையும் விசிலும் ஒன்றுதான். அதனால், திமுகவை புறக்கணித்து இரட்டை இலைக்கு வாக்களிப்பவர்களும் கூட விசில் சின்னத்துக்கு வாக்களியுங்கள்.

திமுகவுக்கு வாக்களிப்பதினால், உங்களுக்கு என்ன பயன்? அதனால், ஆளுங்கட்சியான தவெகவுக்கு வாக்களியுங்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்பட பல அமைச்சர் தோல்வியை சந்தித்துள்ளனர்.

தற்போது இருப்பது கருணாநிதி இருந்த திமுக இல்லை. உதயநிதி ஸ்டாலினால் பாதுகாக்கப்படும் திமுகவாக உள்ளது. அதனால், ஆளுங்கட்சி வேட்பாளருக்கு வாக்களியுங்கள்.

மதுராந்தகத்தில் நிற்பதும் முதல்வர் விஜய்தான் என கருதி வாக்களியுங்கள். இதன்மூலம், அதிகமான சட்டப்பேரவை உறுப்பினர்களை பெற்று ஆட்சியை பெரும் பலத்துடன் செயல்படுத்த முடியும்.

பல்வேறு ஊழல்களை தவெக அரசு ஒழித்திருக்கிறது. அதேபோல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் புறக்கணிக்கப்பட்ட நபரை, பழனிசாமி இங்கு மீண்டும் வேட்பாளராக நிறுத்தியுள்ளார். அதனால், அவரை புறக்கணித்து தவெகவுக்கு வாக்களிக்க வேண்டும்” என்று அவர் பேசினார்.

SCROLL FOR NEXT