சென்னை: பால் கொள்முதல் விலை உயர்வு குறித்த அறிவிப்புக்கு முதல்வர் விஜய், பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் நிறுவனர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த சுமார் 4 மாதங்களில் ஆவினுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களுக்கான பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும், ஊக்கத்தொகையை லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தி 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டதோடு, இந்த பால் கொள்முதல் விலை உயர்வினால் ஆவினுக்கு ஏற்படும் நிதியிழப்பை மாநில அரசு ஈடு செய்யும் என தெரிவித்துள்ள முதல்வர் விஜய்க்கும், அவரின் கவனத்திற்கு கொண்டு சென்ற பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமிக்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதே சமயம் பால் உற்பத்தியாளர்களின் நலனை கவனத்தில் கொண்ட முதல்வர் விஜய், பொதுமக்களுக்கு ஆண்டின் 365 நாட்களும் ஆவின் பாலினை தங்கு தடையின்றி கொண்டு போய் சேர்க்கும், பால் விநியோகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்களின் நலனை கவனத்தில் கொண்டு ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகையை, உழைப்பிற்கேற்ற வகையில் பால் முகவர்களின் வருமானத்தை உயர்த்துவதற்கான அறிவிப்பை வெளியிடாதது மிகுந்த வருத்தமளிக்கிறது.
தவெக அரசின் முதல் பட்ஜெட் சேவை சார்ந்த தொழிலாக விளங்கும் பால் விநியோகத் தொழிலில் தமிழ்நாடு முழுவதும் ஈடுபட்டு வரும் லட்சக்கணக்கான பால் முகவர்களுக்கு கடந்த ஆட்சியாளர்கள் செய்த ஏமாற்றத்தை மீண்டும் ஏற்படுத்தியிருப்பதோடு, அவர்கள் பால் முகவர்கள் சமுதாயத்திற்கு செய்த துரோகத்தை நினைவூட்டுவதாகவும், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகவும் இந்த அறிவிப்பு உள்ளது என்பதை முதல்வர் விஜய் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி ஆகியோரது கவனத்திற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கொண்டு வருகிறது.
மேலும், கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் ஆவினை வெறும் வாக்கு வங்கி அரசியலுக்கான ஆயுதமாக மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்பட்டு வந்ததோடு, கடந்த 2022ம் ஆண்டு திமுக அரசு ஆவினுக்கான பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்திய போது அந்த உயர்விற்கேற்ப ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தாமல் விட்டதால் மட்டும் ஆவினுக்கு சுமார் 1,275 கோடி ரூபாய் இழப்பும், 2021 தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற ஆட்சிக்கு வந்த உடனே ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்த வகையில் ஐந்தாண்டுகளில் சுமார் 1,825 கோடி ரூபாயும் என சுமார் 3,100 கோடி ரூபாய் ஆவினுக்கு நிதியிழப்பு ஏற்பட்ட காரணத்தால் தற்போது வரை ஆவின் நிறுவனம் மீள முடியாத பேரிழப்பில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
எனவே கடந்த திமுக அரசு செய்த மாபெரும் தவறை தற்போதைய தவெக அரசும் செய்வது ஆவின் நிர்வாகத்தை அழிவிற்கு கொண்டு சென்று விடும் என்பதால் அமுல், நந்தினி, மதர் டெய்ரி உள்ளிட்ட மற்ற கூட்டுறவு பால் நிறுவனங்களைப் போல பால் கொள்முதல் விலை உயர்விற்கு ஏற்ப ஆவின் பால் விற்பனை விலையை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஏனெனில், ஆவின் நிறுவனம் தமிழக அரசின் நிதிப் பங்களிப்போடும், ஆதரவோடும், லாப நோக்கமின்றி செயல்பட்டு வரும் வணிக நிறுவனமாகும் என்பதால் அதன் வணிகத்தன்மையில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், அமுல், நந்தினி போல் உலகளாவிய வணிகச் சந்தையில் ஆவின் நிறுவனம் கோலோச்சுவதோடு, பொதுமக்களுக்கு தங்குதடையற்ற பால் விநியோகத்தை செய்திடவும் ஆவினின் அடிப்படை கட்டமைப்புகள், நிர்வாகம் செம்மையுற செயல்பட வேண்டும்.
அதற்கு மற்ற மாநில கூட்டுறவு பால் நிறுவனங்களைப் போல சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவும், பால் முகவர்களுக்கு ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகையை உடனடியாக உயர்த்தி வழங்கிடவும் வேண்டும் என தமிழக முதல்வர் விஜய்யையும், பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமியையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.” என்று பொன்னுசாமி கூறியுள்ளார்.