மேட்டூர் / தருமபுரி: கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர் மேட்டூர் அணையை வந்தடைந்ததை தொடர்ந்து, அணைக்கான நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால், கர்நாடகாவில் உள்ள கபினி அணை முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, அணையில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் இரவு விநாடிக்கு 4,923 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 11,988 கனஅடியாக அதிகரித்தது. தொடர்ந்து நேற்று மாலை நீர்வரத்து மேலும் உயர்ந்து விநாடிக்கு 18,905 கனஅடியாக பதிவானது.
காவிரி கரையோர மக்களின் குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவைவிட நீர்வரத்து அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 74.55 அடியாகவும், நீர்இருப்பு 36.74 டிஎம்சியாகவும் இருந்தது.
ஒகேனக்கல்லில்... தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று முன்தினம் விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, ஒகேனக்கல் காவிரியாற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் விதித்த தடை 2-வது நாளாக நேற்றும் நீடித்தது.
நீர்வரத்து அதிகரிப்பால் பிரதான அருவி, சினி ஃபால்ஸ் அருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் செந்நிறத்தில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் காவிரி கரையோரப் பகுதிகளில் வருவாய்த் துறை, வனத்துறை மற்றும் காவல் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.