தமிழகம்

மேட்டூர் அணை கால்வாயில் குடிநீருக்காக 10 நாட்களுக்கு நீர் திறப்பு

விவசாயிகள் வலியுறுத்திய நிலையில்...

எஸ்.விஜயகுமார்

சேலம்: மேட்டூர் அணை கால்வாயில் பாசனத்துக்காக நீர் திறக்கப்படாத நிலையில், குடிநீர் தேவைக்காக கால்வாயில் நீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அணையில் இருந்து கால்வாயில் விநாடிக்கு 400 கனஅடி நீர் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.

பொதுப் பணித் துறையின் அட்டவணைப்படி, மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி முதல் ஜனவரி 28-ம் தேதி வரை 230 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கு சுமார் 330 டிஎம்சி நீர் காவிரியில் திறக்கப்படும்.

இதேபோல், மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்காக, ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை, 137 நாட்களுக்கு சுமார் 9 டிஎம்சி நீர் திறக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை, கர்நாடகா விடுவிக்காததால், மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாமல், டெல்டா பாசனத்துக்கு தாமதாக செப்டம்பர் 1-ம் தேதியில் தான் நீர் திறக்கப்பட்டது.

இந்த சிக்கலால், மேட்டூர் கால்வாய் பாசனத்துக்கு ஆகஸ்ட் 1-ம் தேதி நீர் திறக்கப்படவில்லை. இதனால், கால்வாய் பாசனத்தை நம்பியுள்ள சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் நிலத்திலும் விவசாயம் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், எல் நினோ தாக்கத்தால் சேலம் மாவட்டத்தில் போதிய மழை பெய்யாமல், மாவட்டத்தின் பல பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்ட நிலையில், மேட்டூர் கால்வாய் பாசனப் பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி, கால்வாயில் குடிநீருக்காக நீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள், மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தினர்.

டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படாத நாட்களில், காவிரி கரையோர மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து நீர் திறக்கப்படுவது வழக்கம். அதுபோல, கால்வாய் பாசனத்துக்கு நீர் திறக்கப்படாத ஆண்டுகளில், மக்கள் நலன் கருதி குடிநீருக்காக கட்டாயம் நீர் திறக்க அரசு உத்தரவிட வேண்டும் என்று இந்து தமிழ் திசை நாளிதழில் செய்தி வெளியானது.

இந்தச் சூழலில், மேட்டூர் அணையில் இருந்து, கால்வாய் பகுதிகளின் குடிநீர் தேவைக்காக, இன்று மதியம் 2 மணி முதல் விநாடிக்கு 400 கனஅடி வீதம் நீரை, மேட்டூர் அணை நிர்வாகப் பொறியாளர் வெங்கடாசலம் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், கிழக்கு, மேற்கு கால்வாய் உதவி செயற்பொறியாளர் மதுசூதனன், அணைப்பிரிவு பொறியாளர் சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குடிநீருக்காக 10 நாட்களுக்கு நீர் திறக்கப்பட்டுள்ளதன் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் உள்ள கால்வாய் பகுதி மக்கள் பயனடைவர்.

71-வது ஆண்டு:

மேட்டூர் அணை வரலாற்றில், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் தற்போது 71-வது ஆண்டாக நீர் திறக்கப்பட்டுள்ளது. அதில், பாசனத்துகாக உரிய காலத்தில் ( ஆகஸ்ட் 1) 35 முறையும், உரிய காலத்துக்கு முன்னரே 14 முறையும், தாமதமாக 13 முறையும் நீர் திறக்கப்பட்டுள்ளது. பாசனத்துக்காக 5 முறை நீர் திறக்கப்படவும் இல்லை. குடிநீர் தேவைக்காக மேட்டூர் கால்வாயில் ஏற்கெனவே 3 முறை நீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது 4-வது முறையாக குடிநீர் தேவைக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT