சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்க, பாதுகாப்பு அனுமதி அளிக்கப்பட்டு 5 மாதங்களை கடந்தும் இதுவரை முதல் ரயில் சேவை தொடங்கப்படவில்லை.
இத்தடத்தில் மெட்ரோ ரயிலை இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் மெட்ரோ ரயில் முதல் கட்டம், முதல் கட்ட நீட்டிப்பு திட்டம் நிறைவடைந்து, விமானநிலையம் - விம்கோநகர் வரையும், பரங்கிமலை - சென்னை சென்ட்ரல் வரையும் என இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்களில் தினசரி 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர். இதற்கிடையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 4-வது வழித்தடம் ஒன்றாகும்.
இத்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை உயர்மட்டப்பாதையாகவும் அமைகிறது.
9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலைங்களும் இடம்பெற உள்ளன. தற்போது, பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டப்பாதை பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
இதற்கிடையில், 4-வது தடத்தில் ஒருபகுதியாக, பூந்தமல்லி - வடபழனி வரை 14.6 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் வழித்தடம் கடந்த பிப்ரவரியில் அமைக்கப்பட்டது.
இத்தடத்தில், மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையரின் பல கட்ட சோதனைகளுக்கு பிறகு, இத்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்க கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அனுமதி வழங்கப்பட்டது.
இதன்பிறகு, மார்ச்சில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சட்டப்பேரவை தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, தாமதமானது. தேர்தல் முடிந்து, தவெக அரசு ஆட்சிக்கு வந்து 5 மாதங்களை கடந்தும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படவில்லை.
இதற்கிடையில், தவெக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய், இரண்டு வாரங்களுக்கு முன்பு, இத்தடத்தில் மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து, தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரிலும் இந்த மெட்ரோ ரயில் சேவை மிக விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், மெட்ரோ ரயில் சேவை தொடங்குவது தொடர்பாக எந்தவித அறிவிப்பும் இல்லாமல் உள்ளது. இத்தடத்தில், விரைவில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, “இத்தடத்தில் ரயில் சேவை தொடங்குவது தொடர்பாக நாங்கள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளோம். இதற்கான அதிகாரப்பூர்வ தொடக்க விழாவுக்கு அவர்கள் நேரம் ஒதுக்கி கொடுத்தபிறகு, ரயில் சேவை தொடங்கும்” என்றனர்.