சென்னை: கடந்த ஆட்சியின் போது, பரந்துாரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து, பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை 53 கி.மீ. துாரம் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த 2025-ம் ஆண்டு மாதம் விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் மெட்ரோ ரயில் நிறுவனம் சமர்பித்தது.
அதற்கு, தமிழக அரசு 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டது. அதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டது. இதனிடையே, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு த.வெ.க. அரசு பொறுப்பேற்ற நிலையில், பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை ரத்து செய்வதாக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்தார்.
இதனால், பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் தூரம் குறைக்கப்பட்டு, பூந்தமல்லியில் இருந்து சுங்குவார்சத்திரம் வரை மட்டுமே திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: பூந்தமல்லி – பரந்தூர் மெட்ரோ ரயில் திட்டத்தை பொறுத்தவரை இரண்டு கட்டங்களாக செயல்படுத்த திட்டமிட்டோம், முதல் கட்டம் பூந்தமல்லி – சுங்குவார்சத்திரம் வரை, 28 கி.மீ. துாரம் 8,779 கோடி ரூபாயிலும், இரண்டாவது கட்டம் சுங்குவார்சத்திரத்தில் இருந்து பரந்தூர் விமான நிலையம் 2வது முனையம் வரை, 25 கி.மீ. துாரம் 7ஆயிரம் கோடி ரூபாயிலும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
தற்போது பரந்தூர் விமான நிலையம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பூந்தமல்லி – சுங்குவார்சத்திரம் வரை மட்டுமே முதல் கட்டத்துடன் திட்டம் நிறைவு செய்யப்படும். இத்திட்டம் மத்திய, மாநில அரசின் பங்களிப்பில் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.